Ad Widget

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்! – சி.சிவமோகன்

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Siva-mohan

வட மாகாண சபையின் 8 ஆவது அமர்வு நேற்று காலை 9.30 மணிக்கு கைதடியில் உள்ள பேரவை செயலகத்தில் நடைபெற்றது.

அதில் வட மாகாணசபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என பிரேரணை ஒன்றினை முன் வைத்து உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறும் அரசுகளால் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும்.

1979ம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தால் 03 வருடங்களுக்கு என்று மட்டும் கொண்டு வரப்பட்ட குறித்த பயங்கரவாத தற்காலிக ஏற்பாட்டுச்சட்டம் அதனை தொடர்ந்து வந்த அரசுகளால் 1982ம் 1988ம் ஆண்டுகளில் நிரந்தரச் சட்டமாக்கப்பட்டது.

தமிழ் மக்களை மட்டும் இலக்கு வைத்து கொண்டுவரப்பட்ட குறித்த சட்டம், முன்னறிவித்தல் இன்றி எவரையும் எவ்விடத்திலும், தம் விருப்புக்கு ஏற்ப பொய் குற்றம் சுமத்தி கைதுசெய்யலாம்.

அவசர கைதுகளுக்கும், பிணையில் எடுக்க முடியாத தடுப்பு காவலுக்கும், நீண்ட நேர சித்திரவதைகளுடன் வற்புறுத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கும், பொதுவில் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத அந்த குற்ற ஒப்புதல் பத்திரத்தை கொண்டு வழக்குத்தாக்கல் செய்வதற்கும், தாம் விரும்பாத ஊடகத்தை தடை செய்வதற்கும் வழி வகை செய்கின்றது.

1966ம் ஆண்டு ஐநா சபையால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச குடியியல் அரசியல் உரிமைகளுக்கான உடன்பாட்டு ஒப்பந்தம், சட்ட விரோத கைதுகள், பாரபட்சமான இன மத பாகுபாடுகளுடனான விசாரணைகள், மனித சித்திரவதைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், ஐநா சபையின் சரத்துகளுக்கு முரணான குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்யுமாறு இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து தரப்பினரையும் வட மாகாணசபை ஊடாக கோரும் இப் பிரேரணையை முன் வைப்பதாக மேலும் தெரிவித்தார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடாக இருந்தால் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் அச் சட்டம் நீக்கப்பட்டாலே ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல இந்த பயங்கவாத தடைச்சட்டம் தடையாக இருக்கின்றது எனவே இந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்திருந்தார்.

Related Posts