வடக்கிலிருந்து படைக்குறைப்பு என்ற பேச்சுக்கு இனி இடமில்லை” – இப்படி உறுதிபடத் தெரிவித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
நேற்று காலை தேசியப் பத்திரிகைகளின் ஆசிரியர்களையும் நிர்வாகிகளையும் அலரி மாளிகையில் அவர் சந்தித்துப் பேசினார். அப்போதே இந்தக் கருத்தை அவர் வெளியிட்டார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள் பஸில் ராஜபக்ஷ, டலஸ் அழகப்பெரும, ஜி.எல்.பீரிஸ், கெஹலிய ரம்புக்வெல மற்றும் பொலிஸ்மா அதிபர் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
வடக்கில் புலிகளின் மீளெழுச்சி என்பது வடக்கு, கிழக்கில் இராணுவத்தை நிரந்தரமாக நிலைபெறச் செய்வதற்கான கட்டுக்கதை என்று குற்றம் சுமத்தப்படுகின்றதே என ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில் தொடர்ந்து கூறியவை வருமாறு:-
வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவத்தை வாபஸ் பெறமாட்டோம். அதை உறுதியாகவும் இறுதியாகவும் ஏற்கனவே தெரிவித்து விட்டோம். படை வாபஸ் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே அண்மைக்காலத்தில் வடக்கிலிருந்து எழுபது மினி முகாம்கள் மற்றும் படை நிலைகள் அகற்றப்பட்டு விட்டன. அதற்கு மேலும் படைக்குறைப்பு என்ற விடயத்துக்கு இடமேதுமில்லை. சாதாரண பாதுகாப்புக்குப் படைநிலைகள் அவசியம். ஏனைய பிரதேசங்களில் எப்படிப் படையினர் நிலை கொண்டுள்ளனரோ அது போலவே வடக்கு, கிழக்கிலும் படையினர் நிலை கொண்டுள்ளனர். அவர்கள் தொடர்ந்தும் அங்கிருப்பர். ஆகவே, படைகளை அங்கு நிரந்தரமாக வைத்திருப்பது என்பது ஏற்கனவே தீர்க்ககமாக எடுக்கப்பட்டு திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட விடயம். அதை முன்னெடுப்பதற்காக ‘புலி மீளெழுச்சி’ என்ற கதைகளை அவிழ்த்துவிடத் தேவையில்லை. நாம் 13 ஆயிரத்துக்கும் அதிகமான புலிகளை புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைத்திருக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள். ஏற்கனவே பல சம்பவங்கள் நடைபெற்றுவிட்டன. அதைப் பற்றிய தகவல்களில் புனை கதை ஏதுமில்லை. இப்படித்தான் விடுதலைப் புலிகளின் ஆரம்பக் காலத்திலும் சுவரொட்டிகள் ஒட்டுதல், அங்கு இங்கென சில வன்முறைச் சம்பவங்களுடன் அவர்கள் தமது நடவடிக்கைகளைத் தொடங்கினர். அப்போது ஆட்சியிலிருந்தோர் அசிரத்தையாக இருந்துவிட்டதால் விடயம் பூதாகரமாகி நாடே பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இனிமேலும் அப்படி ஒரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது. எனவே, நாம் இந்த விடயத்தில் மிக அவதானமாகவும், சிரத்தையுடனும் உள்ளோம். படைகளை வாபஸ் பெற்று மீண்டும் நாடு ஒரு நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைமையை ஏற்பட இடமளிக்க மாட்டோம். சர்வதேச விசாரணை பற்றியெல்லாம் சிலர் பேசுகின்றனர். நாம் உள்நாட்டுக்குள் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். காணாமல் போனோர் பற்றிய விசாரணை ஆணைக்குழுவும் அத்தகைய நடவடிக்கையின் ஒரு பகுதியே. காணாமல் போனோர் என்று கூறப்படுவோர் பலர் வெளிநாட்டில் இருக்கின்றார்கள் எனத் தெரிகின்றது. இது பற்றியெல்லாம் நாம் விசாரிக்க வேண்டியுள்ளது. முறையான விசாரணைகள் நடக்கும். உண்மைகள் கண்டுபிடிக்கப்படும். அதற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை. அத்தகைய சர்வதேச நடவடிக்கையில் எமக்கு நம்பிக்கையில்லை. அது எமது இறைமையில் தலையிடும் செயல். அதற்கு அனுமதிக்கவோ இணங்கவோ முடியாது.
பொது பலசேனா சட்டத்தைக் கையிலெடுத்துள்ளதா என்று நீங்கள் கேட்கின்றீர்கள். அப்படி யாரும் சட்டத்தைக் கையிலெடுக்க அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு மத விவகாரங்களை ஒட்டி எழுந்துள்ள நெருக்கடிகளைக் கையாள்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு ஒன்றை அமைக்கவுள்ளோம். அப்பிரிவு இந்தப் பிரச்சினைகளைக் கையாண்டு, ஒழுங்கை நிலைநாட்டும். தற்போது எழுந்துள்ள மதரீதியான நெருக்குவாரம் குறித்து எல்லா மதத் தலைவர்களையும் அழைத்து நான் பேசவிருக்கிறேன். அதன் மூலம் சுமூக நிலை உருவாக்கப்படும். இனப்பிரச்சினைக்ககான தீர்வு குறித்து பேசுவதற்குப் பொருத்தமான இடம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுதான். எட்டப்படக்கூடிய எந்தத் தீர்வையும் சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்குத்தான் உள்ளது. ஆகவே அதனுடன் பேசி, இணக்கம் காணுவதே பொருத்தமானது. எனவே தீர்வுக்கான பேச்சு நடத்துவதாயின் தமிழ்க்கூட்டமைப்பு அங்குதான் வரவேண்டும். – என்றார் ஜனாதிபதி