அழகுச் சிகிச்சை நிலையமொன்றிலிருந்து வருவதாகக் கூறி வீடொன்றிலிருந்த கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் மயக்க மருந்து தெளித்துவிட்டு, 25 பவுண் தங்கநகைகளை 20 வயதுடைய யுவதியொருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் யாழ். தாவடியில் இடம்பெற்றதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
தாவடி பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு பின்னாலுள்ள வீட்டிலேயே செவ்வாய்க்கிழமை (15) இக்கொள்ளை இடம்பெற்றது.
அழகுச் சிகிச்சை நிலையத்திலிருந்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு வீட்டினுள் நுழைந்த மேற்படி யுவதி, தனது சொந்த இடம் கொழும்பு எனவும் பெயர் தேனுகா (வயது 20) எனவும் கூறினார். இதன்போது, குறித்த வீட்டு உரிமையாளரினுடைய சிறிய தந்தையின் மகன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும் யுவதி கூறினார்.
இதன் பின்னர், குறித்த வீட்டில் இவர் கொள்ளையிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
மயக்கம் தெளிந்த பின்னரே மேற்படி கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் தங்களது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டமை தெரியவந்தது.
இந்நிலையில், இக்கொள்ளை தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் முறைப்பாடு செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறிய தந்தையின் மகனிடம் தாம் விசாரணை மேற்கொண்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இதன்போது அவர், ‘தனக்கும் குறித்த யுவதிக்கும் தவறுதலாக தொலைபேசி அழைப்பு மூலம் தொடர்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இருப்பினும், மேற்படி யுவதி இவ்வாறு கொள்ளையடிப்பார் எனத் தான் எதிர்பார்க்கவில்லை’ எனக் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.