Ad Widget

முத்தையன்கட்டில் ஏற்று நீர்ப்பாசனப் புனர்நிர்மாணப் பணிகள்

முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம் வித்தியாபுரம் விவசாயக் குடியிருப்புக்கு நீர் விநியோகிப்பதற்கான புனர்நிர்மாண வேலைகள் ஆரம்பமாகியுள்ளது. 20 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டிலான இத்திட்டப் பணிகளை வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று புதன்கிழமை (23.04.2014) அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்துள்ளார்.

1

முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற குளமான முத்தையன்கட்டுக் குளத்தில் இருந்து விவசாயத்துக்கு நீரை வழங்குகின்ற ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் 1965 இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நீர்ப்பாசன வசதி பெற்ற பிரதேசங்களில் படித்த வாலிபர் திட்டம், படித்த மகளிர் திட்டம் போன்றவற்றின் மூலம் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உப உணவுப்பயிர்கள் மிகப்பெருமளவுக்கு விளைவிக்கப்பட்டது. ஆனால், போரின் காரணமாக இப்பகுதிகளில் இருந்து மக்கள் இடம்பெயர நேரிட்டதால் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டது. ஏற்று நீர்ப்பம்பிகளும், நீர்வரத்துக் கால்வாய்களும் பலத்த சேதங்களுக்கு ஆளாகின. கைவிடப்பட்டதால் விவசாய நிலங்கள் பல இப்போது பற்றைக்காடுகளாகவும் மாறியுள்ளன.

இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளவும் தத்தமது காணிகளில் குடியேறிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்குத் தற்போது முனைப்புக்காட்டி வருகின்றனர். இவர்களில் வித்தியாபுரம் பகுதி விவசாயிகள் 1985 ஆம் ஆண்டே இடம்பெயர நேரிட்டதால், இப்பகுதியில் நீர் விநியோகக் கட்டுமானங்கள் முற்றாக உயிரிழந்துபோய் உள்ளன. இவற்றை வித்தியாபுரம் விவசாயிகள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கவனத்துக்குக் கொண்டுவந்ததையடுத்துப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

3

புதிய நீர்ப்பம்பி பொருத்துதல், நீர்த்தொட்டி அமைத்தல், நீர்க்குழாய்கள் பொருத்துதல், நீர் திசை திருப்பிகள் அமைத்தல், பழுதடைந்த நீர்க்கால்வாய்களை செப்பம் செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய புனர்நிர்மாணப் பணிகளுக்கு 20 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிதி வடமாகாண விசேட மீண்டெழும் நிதியூட்டத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புனரமைப்புத் திட்டத்தின் மூலம் 35 குடும்பங்களுக்குரிய 105 ஏக்கர் விவசாய நிலமும், முல்லைத்தீவு விவசாயத் திணைக்களத்துக்குச் சொந்தமான நாலரை ஏக்கர் அளவிலான விவசாயப் பண்ணையும் பாசன வசதி பெறவுள்ளன.

மேலும், முத்தையன்கட்டில் உள்ள தட்டையன் மலைக் குளத்தைப் புனரமைப்பது தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. பன்னெடுங்காலமாகப் பராமரிப்பின்றிக் காணப்படும் இக் குளத்தின் அணைக்கட்டுகளும், நீர்ப்பிடிப்புப் பகுதிகளும் காடு மண்டிக் காணப்படுகிறது.

7

வடக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் வருடாந்தக் கண்காட்சி இம்முறை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அளவில் முத்தையன்கட்டிலேயே இடம்பெறவுள்ளது. இதனால், இதற்கு முன்னதாக வித்தியாபுரம் ஏற்று நீர்ப்பாசனத்திட்டப் புனர்நிர்மாணப் பணிகளையும், தட்டையன்மலைக் குளப் புனரமைப்புப் பணிகளையும் முடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்று நீர்ப்பாசன புனர்நிர்மாண அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மற்றும் தட்டையன் மலை குளப் புனரமைப்பு ஆய்வுப் பணிகளில் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் யு.எல்.எம்.ஹால்தீன், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், பிரதி நீhப்பாசனப் பணிப்பாளர்கள் சோ.சண்முகானந்தன், வே.பிரேம்குமார், ந.ஸ்ரீஸ்கந்தராஜா, நீர்ப்பாசனப் பொறியியலாளர் கு.செந்தூரன், பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் ஆகியோருடன் அப்பகுதி கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts