புத்தாண்டின் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்! – டக்ளஸ்

dak-thevananthaaaபிறக்கின்ற சித்திரைப் புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வு மேலும் சிறக்கின்ற புது வாழ்வாக பூக்கட்டும் என்றும், அதற்காக கனிந்திருக்கும் சூழலை சரியான திசை வழி நோக்கி நகர்த்தி செல்ல எமது மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த வாழ்த்து செய்தியில்,…

தமது கனவுகள் யாவும் நினைத்தபடி நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன்
மட்டுமே எமது மக்கள் பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டினையும்
வரவேற்று மகிழ்கிறார்கள்.

அரசியல் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக எமது வாழ்விடங்கள் தோறும் முகமுயர்த்தி வாழவும், அமைதியும் சமாதானமும் பூப்பூத்துக்குலுங்கும் நீடித்த மகிழ்ச்சி இங்கு நிலவவும், ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வு காணவுமே எமது மக்கள் இன்னமும் விரும்புகின்றார்கள்.

எமது மக்களின் நியாயமான விருப்பங்களையும், கனவுகளையும்
உடைத்துப்போடும் வகையிலான திட்டமிட்ட செயல்கள் தீய சக்திகளினால்
உருவாக்கப்பட்டாலும்,தடைகளைக் கடந்து, தமது இலக்கு நோக்கி நடக்கும் எமது மக்களின் இலட்சியக் கனவுகளை யாராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.

மதிநுட்ப சிந்தனையும், சாணக்கிய தந்திர நடைமுறை சாத்திய யதார்த்த வழிமுறையும் எமது மக்களை வழிநடத்த வேண்டும்.

அதை ஏற்று எமது மக்கள் இன்னமும் முழுமையாக அணிதிரளும் போது
இனி பிறந்து வரும் ஒவ்வொரு புத்தாண்டும் எமது மக்களின் வாழ்வில்
படிப்படியான முன்னேற்றங்களையே தந்துகொண்டிருக்கும்.

புத்தாண்டின் மகிழ்ச்சி என்பது எமது மக்கள் புத்தாடை அணிந்து
ஆடிப்பாடி மகிழும் வேடிக்கை நிகழ்வு மட்டுமல்ல.

புதியதோர் வாழ்வின் மகிழ்ச்சிக்குள் நுழைய ஆசைப்படும்
ஆனந்த திருநாளாகவே எமது மக்கள் அகம் மகிழ்ந்து ஒவ்வொரு புத்தாண்டுகளையும் வரவேற்கிறார்கள்.

அச்சமற்ற சூழல், அடிமை இல்லாத வாழ்வு, வறுமையற்ற வாழ்வியல் எழுச்சி, எமது தேசத்தை தூக்கி நிறுத்தும் அபிவிருத்தி, அரசியல் உரிமை சுதந்திரம் எமது நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம் என எமது மக்கள் சகலதையும் தடையின்றி அனுபவிக்கும் சூழலை மேலும் நாம் வளர்த்தெடுப்போம்.

இவைகளே பிறந்திருக்கும் புத்தாண்டில் எமது மக்களுக்கு நாம் காட்டும்
எமது நம்பிக்கை ஒளியாகும்.

இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்திருக்கும்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான
டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மதிநுட்ப சிந்தனை வழி நின்று பிறந்திருக்கும் புத்தாண்டை எமது இலக்கு நோக்கி சரிவர பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Posts