Ad Widget

மாகாண நிர்வாகத்துக்கு மத்திய அரசாங்கம் இடையூறு செய்கிறது – பொ.ஐங்கரநேசன்

வடமாகாணத்தின் விவசாய அபிவிருத்திக்கென மாகாண விவசாய அமைச்சு இருக்கிறது. இந்த அமைச்சின் கீழ் ஒரு மாகாண விவசாயப் பணிப்பாளரும் ஐந்து பிரதி விவசாயப் பணிப்பாளர்களும் உள்ளார்கள்.

01

மாவட்டங்களின் விவசாய விரிவாக்கத்துக்கெனப் பிரதிவிவசாயப் பணிப்பாளர்கள் இருக்கும்போது, இவர்களுக்கு மேலதிகமாக மாவட்டச் செயலகங்களில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர்களை மத்திய அரசாங்கம் நியமித்து வைத்திருக்கிறது. இது வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயற்பாட்டு உரிமைகளைப் பறிக்கின்ற, மாகாண நிர்வாகத்துக்கு இடையூறு செய்கின்ற ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகும் என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

04

வவுனியா மாவட்டப் பிரதி விவசாயப் பணிமனை வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (04.04.2014) அன்று அன்னாசிப் பழச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வயல் விழா நடைபெற்றது. பிரதி விவசாயப் பணிப்பாளர் ஷகிலா பானு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அன்னாசிப்பழம் தென் இலங்கையில்தான் விளையும் என்கின்ற நிலைமாறி, இப்போது வவுனியாவிலும் விளைவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் அதிகளவில் அன்னாசி பயிரிடப்படும் கம்பஹா, குருநாகல், பகுதிகளில் விளையும் அன்னாசிப் பழங்களைவிட வவுனியாவில் விளைந்துள்ள பழங்கள் இனிப்புச் சுவை கூடுதலாக உள்ளன. பளை, இயக்கச்சி போன்ற பிரதேசங்கள் தென்னைமரங்களுக்கு இடையே ஊடுபயிராக அதிக அளவில் அன்னாசியை வளர்ப்பதற்கான வாய்ப்பான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்படி விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கென எத்தனையே வாய்ப்புகள் வடமாகாணத்தில் இருந்தபோதும் மத்திய அரச நிர்வாகம் அதற்கு ஒத்துழைப்பதாக இல்லை.

06

மத்திய அரசாங்கம் பார்த்தீனியம் ஒழிப்பதற்கென யாழ்மாவட்டச் செயலகத்தில் உள்ள விவசாயப் பணிப்பாளருக்கு 3 மில்லியன் ரூபா நிதி வழங்கியுள்ளது. அண்மையில் மாகாண விவசாய அமைச்சும் பார்த்தீனியத்தை அழிப்பதற்குப் 15 நாள் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. எங்களிடம் பணம் இல்லை. பொருளாதாரரீதியாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களையும், யுவதிகளையும் பயன்படுத்தி, உலக உணவுத் திட்டம் வழங்கிய அரிசியையும் பருப்பையும் அவர்களுக்கு ஊதியமாக வழங்கியே இந்தத் திட்டத்தை நாங்கள் முன்னெடுத்திருந்தோம். பார்த்தீனியம் ஒழிப்பதைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு எங்களுடன் இணைந்து செயற்படுமாறு மாவட்ட விவசாயப் பணிப்பாளரை நான் கோரியபோது, இராணுவத்தினரைப் பயன்படுத்தியே தாங்கள் பார்த்தீனியம் ஒழிப்பில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார். இராணுவம் சாமத்தியச் சடங்கு தொடங்கிச் சாவீடு வரைக்கும் இன்று பிரசன்னமாகிக் கொண்டிருக்கிறது. இராணுவத்தைச் சிவில் நடவடிக்கைகளில் வலிந்து இழுக்கும் வரலாற்றுத் தவறைச் செய்யாதீர்கள் என்று அவரிடம் நான் தெரிவித்தேன்.

07

இந்தச் சம்பவம் ஒரு உதாரணம்தான். இப்படி, மாகாணசபையின் அத்தனை நடவடிக்கைகளிலும் ஏதோ ஒரு வடிவில் மத்திய அரசாங்கமும் இராணுவமும் தலையீடு செய்கிறது. வடமாகாண சபையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வுக் கண்டுவிட்டதாக ஊர் உலகத்துக்குக் காண்பிக்க முயலும் அரசாங்கம் மறுபுறம், மாகாண சபையின் ஊடாக நாம் எமது மக்களுக்குச் செய்யக் கூடிய குறைந்த பட்சப் பணிகளைக்கூட செய்யவிடமால் தலையிடுகிறது. எமது அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டால் மாத்திரமே இந்தத் தலையீடுகளை இல்லாமல் செய்யலாம். அப்போதுதான் எமது விவசாயப் பொருளாதாரத்தை எமக்கேற்றவாறு நாம் மேம்படுத்தமுடியும் என்றும் தெரிவித்தார்.

08

இந்நிகழ்ச்சியில் வன்னி மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ந.ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர் த. லிங்கநாதன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி. சிவகுமார், விவசாய அமைச்சின் செயலாளர் யு. எல். எம் ஹால்தின், பிரதி விவசாயப் பணிப்பாளர் (விதைகள்) ப. சத்திய மூர்த்தி ஆகியோரோடு அதிக எண்ணிக்கையான விவசாயிகளும், விவசாயத்தை ஒரு பாடமாகப் பயிலும் மாணவ மாணவிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Related Posts