நெடுந்தீவு பிரதேச சபைத்தலைவர் ரெக்சியன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் வீட்டில் இருந்து சூட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பத்தினையடுத்து வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன், ரெக்சியனின் மனைவி அனிதா மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரும் சந்தேகத்தின் பேரில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் படி தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலை தொடர்பிலான வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதிபதி லெனின்குமார் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதிபதி பிரதான சந்தேகநபரான கமலேந்திரன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.