பிரதேச சபையின் தீர்மானத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்

வலி. வடக்கு பிரதேச சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதர்ப்பு தெரிவித்து அரச தாதியர் சங்கத்தின் தாய்ச் சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையின் முழுவடிவம்…

01.04.2014 அன்று பத்திரிகைகளில் வெளியான வலி வடக்கு பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகளின் தாய்ச்சங்கத்தினராகிய நாம் கடும் கண்டனத்தினையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரதேச சபையில் கடமையாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர் சுகாதார வைத்திய அதிகாரியை மிரட்டியதும் இதனை அடுத்து வெற்றிடங்கள் இல்லாமல் முறையற்ற முறையில் கடமையாற்றிய மூன்று பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சுகாதாரத்திணைக்களத்தினாலும் உள்ளுராட்சித் திணைக்களத்தினாலும் சுகாதாரத் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டதும் நாம் அறிந்ததே.

மாற்றலாகும் உத்தரவு வழங்கப்பட்ட பின்னரும் கடமைக்குத் திரும்பாத பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆளுநரின் உத்தரவின் பின்னர் கடமையேற்றிருந்தனர். இதன் பின்னர் இவர்களுக்கு ஆதரவாக ஏனைய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது கோரிக்கைகள் நியாமற்ற நிலையில் வேலை நிறுத்தப்போராட்டமானது தீர்க்கப்படாமலேயே ஏறத்தாழ ஒரு மாத காலமாக நடைபெற்று வருகின்றது.

குறிப்பிட்ட சில காலமாக மேற்குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாகவும் சுகாதார வைத்திய அதிகாரிகளது பணிகள், அதிகாரங்கள் தொடர்பாகவும் பல்வேறு பொய்யான, பிழையான தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இந்த வரிசையில் 01.04.2014 அன்று பத்திரிகைகளில் வலி வடக்கு பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாகவும் அதில் சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றாத, மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாத ஒருவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட சுகாதார வைத்திய அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குரியவையாகும். குறிப்பிட்ட சுகாதார வைத்திய அதிகாரியானவர் தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த இரண்டு வருடங்களாகக் கடமையாற்றி வருகின்றார். இவர் மிகுந்த கடமையுணர்வுள்ள, கர்ப்பிணித் தாய்மார்கள் குழந்தைகளின் நலனில் மிகுந்த அக்கறையுள்ள ஒருவராவார். இவரது கடமைக் காலத்தில் இப்பிரதேசத்தில் டெங்கு நோயானது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதுடன் இவர் பல புதிய சிந்தனைகளுடன் பல்வேறு சுகாதாரம் சார்ந்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார். இவரது பணிகள் மாவட்ட மற்றும் மாகாண மட்ட சுகாதாரக் கூட்டங்களில் பாராட்டப்படுவது யாவரும் அறிந்ததே. போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் உணவு கையாளும் நிலையங்கள் மீது கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடான சுகாதாரம் சார்ந்த நடைமுறைகளால் சில பிரதேசசபை உறுப்பினர்களின் உறவினர்களின் உணவகங்களும் உள்ளடக்கப்பட்டதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

இத்தீர்மானத்தில் சுகாதார வைத்திய அதிகாரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தனிப்பட்ட நலன்களைக் கருதி சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகும்.

மேலும் சாதாரண தொழிலாளியினை பதவியில் இருந்து மாற்றுவது போல் சுகாதார வைத்திய அதிகாரி மீது தீர்மானம் கொண்டு வருவது மிகவும் நகைப்பிடமான ஒரு விடயமாகும். வைத்தியர்களது இடமாற்றமானது மத்திய அமைச்சினாலேயே நடைமுறைப்படுத்தப்படுவது இவர்கள் அறியாமல் இருப்பது ஆச்சரியமானது. இவ்வாறான கேலிக்குரிய தீர்மானங்கள் குறிப்பிட்ட பிரதேச சபை உறுப்பினர்களின் பிரதேச சபை தொடர்பான அறிவின்மையினையும் முதிர்ச்சியின்மையினையும் காட்டி நிற்கின்றன. சாத்தியமற்ற கோரிக்கைகளுக்காத் தீர்மானங்கள் நிறைவேற்றுவதும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மக்கள் நலனுக்கு எதிராகவும் குறுகிய நலன் கொண்டும் நடப்பதும் மிகவும் கவலைதரும் விடயங்களாகும்.

இவ்வாறு அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

scan0100-English

Related Posts