சாவகச்சேரி கச்சாய் வீதியால் சென்றுகொண்டிருந்த சிறுவன் ஒருவனைப் படையினர் துரத்தியமையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது:-
பாடசாலை முடித்து வீடு வந்த சிறுவன், சாவகச்சேரி சந்தையில் வியாபாரம் மேற்கொள்ளும் தனது பெற்றோரிடம் செல்வதற்க்காக கச்சாய் வீதியில் அமைந்துள்ள தண்டவாளப் பகுதியூடாக நடந்து சென்றுள்ளான்.
இதன் போது குறித்த பகுதியால் வந்த படையினரது ஜீப் ரக வாகனம் ஒன்று குறித்த சிறுவனுக்கு அருகில் சென்று நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்குள் இருந்த சிப்பாய் ஒருவர் குறித்த சிறுவனின் கையைப் பிடித்து இழுத்து வாகனத்துக்குள் ஏற்ற முற்பட்டுள்ளார். இதன்போது அச்சமடைந்த சிறுவன் கையை இழுத்துப் பறித்துக் கொண்டு அழுது கொண்டு பெற்றோரிடம் ஓடியுள்ளான்.
குறித்த சிறுவனைப் பின் தொடர்ந்த படையினர், அவனது பெற்றோரிடம் சிறுவன் ஓடி வந்ததாகவும் அதற்கான காரணம் என்ன என்றும் தமக்குச் சந்தேகம் ஏற்பட்டதாலேயே பின்தொடர்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த சிறுவன், தான் ஓடிவரவில்லை. தன்னை இழுத்து ஜீப்பில் ஏற்ற முற்பட்டதாலேயோ பயத்தில் ஓடி வந்ததாகவும் தெரிவித்தான்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சாவகச்சேரி படைத் தளபதி சம்பவ இடத்துக்கு வந்து பிரச்சினைகளை தீர்த்து வைத்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் உண்மை என்ன என்பது சம்பந்தப்பட்ட தரப்பினருக்கே வெளிச்சம் என்று பொது மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை, குறித்த சிறுவன் 10 வயதில் காணாமல் போயிருந்து பின்னர் கொழும்புத்துறையில் வைத்து மீட்கப்பட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.