பொது மக்களுக்காக வடக்கு மாகாண சபை செயற்படுமானால் அவர்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அதன்படி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் விடயத்தில் வடமாகாண சபையினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவனின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தொலைபேசி மூலம் ஆளுநர் ஊடகவியலாளர்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களில் பணியாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீள் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உள்ளுராட்சி மன்றங்களில் கடமையாற்றிய பொதுச் சுகாதார பரிசோதகர்களை மீண்டும் உள்ளுராட்சி மன்றங்களிலேயே நியமிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளுராட்சி மன்றத்திலும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டள்ளன.
மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஆகியோரின் முடிவுகளுக்கமைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கிய இடமாற்றங்களினால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்களாக இருந்தால் தொடர்ந்தும் பொது மக்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களின் நலன்களைக் கருத்திற் கொண்டே அனைவரும் செயற்பட வேண்டும்.
ஆகவே இந்த விடயத்தில் மக்கள் நலன் சார்ந்ததாக மாகாண சபையினால் எடுக்கப்படும் எத்தகைய தீர்மானத்திற்கும் ஆதரவு வழங்கப்படுமென்றும் ஆளுநர் சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்.