வலி. கிழக்கு பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு

KN-daklasமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக வலி.கிழக்குப் பிரதேச சபைக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்போது குறித்த பிரதேச சபையின் தவிசாளர் உதயகுமார் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதேச சபையின் ஊடாகத் தமது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வர்த்தகர்களும் மக்களும் நாளாந்தம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில், பிரதேச சபையில் கூடியிருந்த வர்த்தகர்களும் மக்களும் தமது அவல நிலை குறித்துத் தொலைபேசி வாயிலாக அமைச்சருக்கு தெரியப்படுத்தியதுடன், இதற்குச் சரியான தீர்வினைக் காணுமாறு வலியுறுத்திப் போராட்டத்தை முன்னெடுத்ததுடன், அமைச்சரை குறித்த பிரதேச சபைக்கு வருகை தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனிடையே, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அக்கரைப் பகுதி மக்கள் தாம் பிரதேச சபை ஊடாக பெற்றுக் கொள்ளும் சேவைகளான குடிநீர், வீதிப் புனரமைப்பு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதில் எதிர்கொண்டு வருகின்ற இடர்பாடுகளை அமைச்சருக்கு தெளிவுபடுத்தினர்.

அத்துடன், தமக்கு நிரந்தரக் காணிகளைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்ததுடன், அக்கரைக் கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வால் தாம் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பிலும் எடுத்துரைத்தனர்.

குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் சட்டவிரோத மண் அகழ்வை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச செயலர் பிரதீபனிடமும் பொலிஸாரிடமும் பணிப்புரை விடுத்தார்.

அத்துடன், அச்செழு விளையாட்டு மைதானம் தொடர்பில் உரிய தீர்வு காணப்படும் வரையில் வீரர்களை மைதானத்தில் அனுமதிக்குமாறும் பிரதேச செயலரிடம் தெரிவித்தார்.

தமது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து, உரிய தீர்வைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு அங்கிருந்த மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதேவேளை, அங்கு வருகை தந்திருந்த பிரதேச சபை உறுப்பினர்கள் தாம் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Related Posts