காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை மீளத் தொடங்குவதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வடமாகாண சபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெறறது.
வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனினால் கொண்டுவரப்பட்ட மேற்படி பிரேரணையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழிமொழிய சபை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் மேற்படி பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதன்போது உரையாற்றிய விவசாய அமைச்சர்,
‘காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை 90 வருடகாலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்கும், அதனை அண்டியுள்ள 700 ஏக்கர் நிலப்பரப்பில் சுண்ணக்கல் அகழ்வதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதனால் அச்சுற்றாடல் பாதிக்கப்படுவதுடன், எமது பெருமளவான நிலங்கள் அபகரிக்கப்படவுள்ளன என்றும் தெரிவித்தார்.
இதன்போது உரையாற்றிய முதலமைச்சர்,
‘மேற்படி சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிப்பதனை நான் முற்றாக எதிர்க்கின்றேன். சீமெந்து தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டால், அதற்காக சுண்ணக்கல் அகழ்வு இடம்பெற்று கடல் மட்டத்தினை விட குறைவான உயரத்தில் நிலங்கள் கீழிறங்குவதினால் கடல் உட்புகும் அபாயம் காணப்படுகின்றது. ஆகவே இந்த பிரேரணையினை நான் வழிமொழிகின்றேன்’ என்று தெரிவித்தார்.
இதேவேளை, விவசாய அமைச்சரினால் கொண்டு வரப்பட்ட, பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட 2000 ஏக்கர் நிலப்பரப்பில் சுண்ணக்கல் அகழ்வை நிறுத்துதல், முத்தையன்கட்டுக் குளத்திற்கு அருகாமையில் 25 அடிக்கும் மேலான ஆழத்தில் கருங்கல் அகழ்வினைத் தடுத்தல், மத்திய அரசினால் நேரடியாக வடமாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளைத் தடுத்து வடமாகாண சபையினூடாக அந்நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வடமாகாணத்தில் முதலீடுகளை மேற்கொள்பவர்கள் தங்கள் முதலீட்டின் மூலம் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதியினை வடமாகாண அபிவிருத்திக்கு பயன்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தில் உள்ளதற்கமைய வடமாகாண சபை அடையாளங்காட்டுகின்ற அபிவிருத்தி நடவடிக்கையில் ஈடுபடுத்தல் போன்ற தீர்மானங்களும் இதன்போது கொண்டு வரப்பட்டன.
இந்த அனைத்து தீர்மானங்களும் சபை உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேறியது.