Ad Widget

அலட்சியம் செய்கிறது அரசு – வடக்கு முதலமைச்சர்

வடமாகாணசபை முறையாக செயற்படுவதற்கு ஆரம்பத்திலிருந்தே அரசாங்கம் ஒத்துழைத்துச் செயற்பட்டிருந்தால், வடமாகாணத் தமிழ் பேசும் மக்களுக்கு உருப்படியான ஓர் அரசியல் சமிஞ்ஞையை வெளிக்காட்டியிருக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வீரகேசரி வாரவெளியீட்டின் பிரதம ஆசிரியர் ஆர்.பிரபாகனின் ஆசிரியர் தலையங்கங்களை உள்ளடக்கிய “தரிசனம்” நூல்வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

CV-cm-vicky-vikneswaran

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…

அரசாங்கம் தென்னிலங்கைச் சிங்களக் கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தினால் அடுத்த தேர்தலில் சிங்கள வாக்குகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருகின்றது. வடமாகாணசபையின் ஒத்துழைப்பை நல்க முன்வந்த எனக்கு நற்சமிஞ்ஞைகளை முதலில் காட்டி விட்டு, எம்மை அலட்சியம் செய்வதிலேயே அரசாங்கம் அக்கறை காட்டி நிற்கின்றது. எமக்கு ஒத்துழைப்பை நல்குவதால் சர்வதேச சமூகத்தின் நெருக்குதல்களைத் தணிக்க முடியும் என்பதில் நம்பிக்கை அற்றே அரசாங்கம் செயற்படுகிறது.

மாகாணசபை முதல்வரின் கருத்தொருமித்தலுடன்தான் முதன்மைச் செயலாளர் நியமிக்கப்பட வேண்டும் என்ற மாகாணசபைகள் சட்டம் பிரிவு 32இன் ஏற்பாடுகளுக்கு எதிராக அதாவது நடைமுறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணாக, அரசாங்கம் தனக்குகந்த பிரதம செயலாளரை பதவியில் நீடிக்கச் செய்து, போர்க்காலத்தின் போதான முன்னைய படைத் தளபதியைத் தொடர்ந்து ஆளுநராக வைத்திருந்து, அவரைக் கொண்டு மாகாணசபைகளுக்கு என்ன உரித்து இருக்கின்றது, எல்லாம் ஆளுநர் வசமே என்ற கருத்தை நிலவச் செய்து, இந்த வடமாகாண சபையால் எதுவுமே செய்ய முடியாது, அவர்கள் கையாலாகாதவர்கள் என்ற கருத்தைக் கரவாக எம் மக்கள் மனதில் விதைக்க அரசாங்கம் கடுமையாகப் பாடுபட்டு வருகின்றது.

இன்று வன்னியில் நடப்பதை எடுத்துக் கொள்வோம். மாந்தையில் மனித எலும்புக்கூடுகள் காணப்பட்ட இடம் ஒரு மயான பூமி என்றுள்ளார் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்கள பணிப்பாளர் நாயகம். இதன் சரி பிழையை பத்திரிகைகள் எடுத்துக் காட்டாது விட்டுவிட்டால் உண்மை விலைபோய்விடும். நாம் ஆராய்ந்து பார்த்ததில் அறுபது வருடங்களுக்கு முன்னர் பூர்வாங்க வரைபடமிலக்கம் S-677ஆனது 2.12.1955இல் அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் துண்டுகள் 31ஆம், 32ஆம் இணையும் இடத்தில்தான் மேற்படி மயான பூமி என்று கூறப்படும் இடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் இவ்விடத்திற்கு ஒரு பக்கம் தெரு, மறுபக்கம் குளம். இந்தத் துண்டு 31 ஆனது திருக்கேதீஸ்வரத்துக்குக் கொடுப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருக்குந் துண்டு. துண்டு 32இற்கு முன்புறத்தில் தெருவின் அடுத்த பக்கத்தில் மேற்படி வரைபடத்தின் படி ஒரு சுற்றுலா பங்களா இருந்திருக்கின்றது. இது போரின் போது அழிந்துவிட்டது. அத்துடன் துண்டு 32இல் ஒரு பலசரக்குக் கூட்டுறவுக் கடையொன்றும் இருந்திருக்கின்றது.

இது இவ்வாறிருக்க துண்டு 32இல் மயான பூமி அமைந்திருந்தது என்பது கட்டுக்கதைபோல் தென்படுகின்றது. கத்தோலிக்க மயான பூமி ஒன்று மேற்குப் புறத்தில் அங்கிருந்து ஒன்றரை கிலோமீற்றர் தொலைவில் இருப்பது உண்மை. ஆனால் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட இடம் இந்துக்கள் வாழ்ந்த இடம். இந்துக்கள் பிரேதங்களைப் புதைப்பது இல்லை. எனவே பணிப்பாளர் நாயகத்தின் கூற்று கேள்விக்கிடமாகியுள்ளது. இது பற்றி இன்று ஆசிரியத் தலையங்கம் எழுதினால் வருங்காலத்தில் அது ஒரு வரலாற்று பூர்வமான கட்டுரையாகிவிடும். மக்கள் இன்றே உஷாராகிவிடுவார்கள். வெளிநாடுகள் விழித்துக்கொள்வன. அதைத்தான் சொல்ல வருகின்றேன்.

இன்னுமொரு இன்றையகாலச் செய்தி. வவுனியாவில் இருக்கும் கொக்கச்சாங்குளம் வவுனியா வடக்கைச் சேர்ந்தது. அதன் ஒரு பகுதி முல்லைத்தீவுக்கும் உரியது. அதாவது தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடமிது. அண்மையில் இதனை வவுனியா தெற்கின் கீழ் அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. அதாவது சிங்களவர் வாழும் பகுதியின் நிர்வாக அலகின் கீழ் மாற்றியுள்ளது. கொக்கச்சான் குளம் இப்பொழுது கலாபோகஸ்வவ (Kelabogaswewa) என்று பெயர் மாற்றப்பட்டு 5000 சிங்களக் குடும்பங்களை அங்கு குடியிருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு இராணுவம் முழு ஒத்தாசையையும் வழங்கி நிற்கின்றது. கொண்டு வரப்படும் 5000 குடும்பங்களும் வடமாகாணத்திற்கு அப்பால் வசிக்கும் குடும்பங்கள். இதுவரை வடமாகாணத்துடன் தொடர்பு கொண்டிராத குடும்பங்கள். மேலும் வவுனியா பாவற்குளத்தில் சுமார் ஒன்பது சதுர கிலோமீற்றர் இடத்தில் 600 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகின்றார்கள்.

மேலும் 2009இல் உள் நாட்டில் குடிபெயர்ந்தவர்களை இருத்த உபயோகப்பட்ட மனிக்பாம் முகாமானது தற்போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. காரணங்கள் கூறப்படவில்லை. இராணுவம் பல காணிகளையும், பண்ணைகளையும் தம் வசம் ஒப்படைக்கும்படி கூறி, உறுதி முடித்துத் தருமாறு எங்கள் அலுவலர்களைக் கட்டாயப்படுத்துகின்றார்கள். கிழக்கில் நடைபெற்ற கட்டாயமான குடிசன விகித மாற்றம் தற்போது வடக்கில் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்கு இராணுவம் உற்ற துணையாக நிற்கின்றது. மூன்று தசாப்த காலமாக நீடித்த உள்நாட்டுப் போரின் போது தமிழ்ப்பேசும் மக்கள் மத்தியில் மிதவாத அரசியல்ப் போக்கு குன்றிப் போயிருந்த சூழ்நிலையில், தமிழ்ப் பத்திரிகைகள் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டு வருவதில் அவர்கள் ஆற்றிய பணியும் பங்கும் மகத்தானது. அரசியல் தலைமைத்துவங்களினால் செய்ய முடியாமல் போன சில காரியங்களைக்கூடத் தமிழ் ஊடகவியலாளர்கள் தங்களுக்கு நேரக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் செய்திருக்கின்றார்கள். பலர் பத்திரிகைத் தொழிலைக் கடைப்பிடிக்கப்போய் உயிர்த்தியாகங்களையுஞ் செய்திருக்கின்றார்கள் என்பதை நாங்கள் மறக்கக் கூடாது. வேறு பலர் நாட்டை விட்டகன்று அஞ்ஞாதவாசம் வாழ்கின்றார்கள் என்பதும் உண்மை.

இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியலும் சமூக வாழ்வும் பெரும் இடர்பாடுகளுக்குள் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், தமிழ் ஊடகங்கள் குறிப்பாக தனியாருக்குச் சொந்தமாக இருக்கின்ற தேசிய தமிழ்ப் பத்திரிகைகள் இதுகாலவரையில் செய்திருக்கக் கூடிய பணிகளுக்கு மேலதிகமாகப் பயனுறுதி உடைய கூடுதல்ப் பணிகளை ஆற்ற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. இன்றைய முதிர்ந்த மூத்த தமிழ் ஊடகவியலாளர்களின் மத்தியில் ஒரு பொதுவான சிறப்பியல்பை அவதானிக்கலாம். அதாவது மூத்த தமிழ் ஊடகவியலாளர்களில் கணிசமானவர்கள் வீரகேசரி நிறுவனத்தில் பணியாற்றிப் பயிற்சி பெற்றவர்களாகவே இருக்கின்றார்கள். நான் சிறுவனாக இருந்த போது வீரகேசரிப் பத்திரிகை மலையக மக்களின் குரல் என்று கூறப்பட்டதைத் தான் கேட்டு வந்தேன். ஆனால் அண்மைக் காலங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கையின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் அவர்கள் இலங்கைத் தமிழ்ப்பேசும் மக்களே என்ற ஒரு நவீன சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகப் பரிணாமம் பெற்று வருகின்றார்கள். அந்த மாற்றத்திற்கு அடி கோலிய நிறுவனம் வீரகேசரி என்று கூறினால் அது மிகையாகாது என்று நம்புகின்றேன்.

சௌமியமூர்த்தி தொண்டமானைத் தொடர்ந்து இளம் அரசியல்வாதி மனோகணேசனின் அரசியல் பண்பாடும் அதற்கு இடமளித்துள்ளது என்றால் ஒருவரும் அதனை மறுக்க முடியாது. முன்னைய காலத்தைப் போல் அன்றி இன்று நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஊடகத்துறை பிரமாண்டமான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதேநேரம் பணபலம் இருந்தால் புதிய ஊடகம் ஒன்றைத் தோற்றுவிப்பது அவ்வளவு சிரமமானகாரியம் அன்று. ஆனால் தரமான அனுபவம் முதிர்ந்த ஊடகவியலாளர்களைக் கடமையில் சேர்த்துக்கொள்வது தான் மிகச் சிரமமான காரியமாக இன்று இருக்கின்றது. ஏன் என்றால் ஊடகவியலாளர்கள்தான் பத்திரிகைத்துறைக்கு ஒரு பெரிய மூலதனம். அவர்கள் தான் ஊடகத்துறையின் வெற்றிக்கு அத்திவாரம் இடுபவர்கள் எனத் தெரிவித்தார் முதலமைச்சர்

Related Posts