வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற பொன் அணிகளின் போர் துடுப்பாட்டத்தில் பழைய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் இளம் தந்தையான ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (23) என்பவர் அடித்து கொலைசெய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என கூறப்படும் நால்வரை நேற்று மாலை கைதுசெய்ததாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
சுந்தரலிங்கம் சிவகர் (22), சிவசங்கநாதன் மதுஷன் (20), இன்பசீலன் பிருந்தாமன் (21), ரமேஷ கொன்ரன்கரன் (21) என்பவர்களையே கைதுசெய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குக்கும் இடையில் வருடாந்தம் பொன் அணிகளின் போர் துடுப்பாட்டப் போட்டி நடாத்தப்பட்டு வருகின்றது.
26 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட 50 ஒவர்கள் கொண்ட இந்தப் போட்டியின் ஆட்டம் நேற்று யாழ்ப்பாணக் கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது திடீரென இரு பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்றப்பட்டது. இக் கைகலப்பில் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரியின் பழைய மாணவனான செட்டியார்தெரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயரட்ணம் தர்ஷன் அமல்ராஜ் (வயது 23) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்ட போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களை தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களை தேடி வருவதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி