வலி.வடக்கின் மயிலிட்டியில் மீன்பிடிக்க முடியும், ஆனால் மீளக்குடியமர முடியாது. இவ்வாறு யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேரா திட்ட வட்டமாகக் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர் வாழ்வுக் குழுவின் தலைவர் அ.குணபாலசிங்கம்.
வலி.வடக்கு மீள்குடியமர்வு தொடர்பில், யாழ்.மாவட்ட இராணுவத் தளபதிக்கும், வலி. வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் குணபாலசிங்கம் இருவருக்குமிடையே நேற்றுமுன்தினம் புதன் கிழமை சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. அந்தச் சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே குணபாலசிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது:
“”பலாலி விமான நிலையத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதால் மயிலிட்டியில் மக்களைக் குடியமர்த்த முடியாது என்று யாழ். மாவட்ட இராணுவத்தளபதி சந்திப்பின்போது குறிப்பிட்டார். மயிலிட்டியில் மக்களை அவர்களது சொந்த இடத்தில் குடியமர்த்த நடவடிக்கை மேற் கொள்வேன் என்று தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் இருப்பதாகவும், பலாலி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும் போது அல்லது ஏறும் போது மயிலிட்டியிலிருந்து தாக்குதல் நடத்தக் கூடும் என்ற காரணத்தினாலேயே மீள்குடியமர்வு சாந்தியமற்றதாகக் காணப்படுகின்றது. மயிலிட்டியில் மீன்பிடியில் ஈடுபடலாம். என்றும் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
போர் முடிந்து விட்டது, இன்னமும் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்ன இருக்கின்றது என்று கேட்டபோது, தற்போது சில இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன. அதனால் விமான நிலையத்துக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்று இராணுவத் தளபதி என்னிடம் தெரிவித்தார்.
அதற்கு நான் நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள் என்று அவரிடமே நேரடியாகத் தெரிவித்தேன். அத்துடன் வளலாயில் இருந்து கொண்டு எங்கள் மக்கள் மயிலிட்டியில் மீன்பிடியில் ஈடுபட முடியாது என்பதையும் அவருக்குத் தெளிவுபடுத்தினேன்.
இராணுவத் தளபதியைப் பொறுத்த வரையில் வளலாயில் மக்களை குடியேற்றுவதே அவர்களது நோக்கமாக இருக்கின்றது”-என்று தெரிவித்தார்.