காணாமற்போனோர் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்த தாயும் மகளும் நேற்று கிளிநொச்சியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி தருமபுரம் முசிலம்பிட்டி வீட்டுத்திட்டத்தில் தன் கணவனையும் ஆண் பிள்ளைகளையும் இழந்த நிலையில் தன் பெண் பிள்ளையுடன் வசித்து வந்த ஜெயக்குமாரியின் வீட்டினுள் புகுந்த பொலிசார் அவரையும் அவரது 13 வயது மகளையும் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.
எனினும் குறித்த கைதும் அதற்கான காரணமும் தமக்கு தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஜெயக்குமாரியின் மூத்த மகன் போராட்டத்தில் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இரண்டு மகன்கள் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு காணாமற் போயுள்ளனர்.
இந்நிலையில் தன் பிள்ளைகளை தேடித் தருமாறு காணாமற்போனோர் தொடர்பாக இடம்பெற்ற எல்லாப் போராட்டங்களிலும் ஜெயக்குமாரி மற்றும் அவருடைய பெண் பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு வந்ததுடன், கடத்தப்பட்ட தன் பிள்ளைகள் தொடர்பாக சர்வதேசத்திடம் நியாயம் கேட்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த இருவரினதும் கைது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதடன் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.