வடபகுதியின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியினை கொண்டு சேதமடைந்துள்ள உள்ளகவீதிகள் வடமாகாண சபையால் மீள்புனரமைப்புச் செய்யப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
தென்மராட்சி, எழுதுமட்டுவாழின் இருவேறு பகுதிகளுக்கான மின்விநியோக திட்டத்தை நேற்றய தினம் ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற பொதுமக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை எந்தெந்த வகைகளில் மேம்படுத்த முடியுமொ அதையே நாம் முன்னெடுத்து வரும் நிலையில் அந்தந்தப் பகுதிகளின் அபிவிருத்திகள் தொடர்பிலும் மிகுந்த கவனம் செலுத்துவதுடன், செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.
ஆனால், நாம் முன்னெடுத்து வரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை குறைகாணும் விதத்தில் சுயலாப அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர். இதுவிடயம் தொடர்பில் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
இப்பகுதியில் வாழும் மக்கள் இங்குள்ள உள்ளகவீதிகளை புனரமைத்து தருமாறு எம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருந்தபோதிலும், உள்ளக வீதிகளின் புனரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது வடமாகாண சபையின் கரங்களிலேயே தங்கியுள்ளது.
நாட்டின் ஏனைய மாகாணங்களை விடவும் வடமாகாணத்திற்கே அதிகளவு நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிதியின் ஊடாக உள்ளக வீதிகளின் புனரமைப்பு உள்ளிட்ட ஏனைய அபிவிருத்தி செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதை உணர்ந்து அவர்கள் செயற்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது வடக்கின் வசந்தம் திட்டத்தின் ஊடாக சாவகச்சேரி எழுதுமட்டுவாழ் தெற்குப் பகுதிக்கான இருவேறு மின்விநியோக திட்டங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும், ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்) அவர்களும் இணைந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இதற்காக 19 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ள நிலையில் இதனூடாக 534 பயனாளிகள் பயனடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி அஞ்சலிதேவி சாந்தசீலன், யாழ்.பிராந்திய மின்பொறியியலாளர் ஞானகணேசன், வடக்கின் வசந்தம் மின்பொறியியலாளர் கோசல ஜயதிலக, ஈ.பி.டி.பியின் தென்மராட்சி பிரதேச இணைப்பாளர் சூசைமுத்து அலெக்ஸான்டர் சாள்ஸ், ஈ.பி.டி.பியின் கொடிகாமம் இணைப்பாளர் விஸ்வா ஆகியோர் உடனிருந்தனர்.