இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அதன் அடிப்படையில் திடமான முடிவினை எடுத்துள்ள வடமாகாண சபைக்கு விவசாயிகள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக இரணைமடு விவசாய சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார்.
இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் விநியோகிக்கும் திட்டம் தொடர்பில் ஏற்பட்டுவந்த இழுபறி நிலைக்குத் தீர்வு காணும் வகையில் வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு குறித்த திட்டம் தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையினை சமர்ப்பித்திருந்தது.
நிபுணர்குழு அறிக்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு விளக்கமளிக்கும் முக்கிய கூட்டம் திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்றிருந்தது.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வடமாகாண அமைச்சர்களான பொன்னுத்துரை ஐங்கரநேசன், பத்மநாதன் சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதியாபரணம் சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி விவசாயிகள் சார்பில் இரணைமடு விவசாயச் சம்மேளனச் செயலாளர் முத்து சிவமோகனும் பங்குகொண்டு தமது நிலைப்பாடுகளைத் தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே முத்து சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஆசிய அபிருத்தி வங்கியினருடனான சந்திப்பின் போது, இரணைமடு நீர் விநியோகம் தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி விவசாயிகள் மத்தியில் ஆய்வினை மேற்கொண்டிருக்கவில்லை. அவ்வாறு ஆய்வினை மேற்கொள்ளாமையே இன்று ஏற்பட்டிருக்கின்ற இவ்வாறான ஒரு நெருக்கடிக்கான காரணம்.
மாகாண சபையின் நிபுணர்குழு மேற்கொண்ட ஆய்வு உண்மையான நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியிருக்கின்றது. இரணைமடுவிலிருந்து குடாநாட்டிற்கு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டால் வரட்சியால் விவசாயச் செய்கைகள் முழுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
இதனால் ஒரே சமூகமான இரண்டு மாவட்டங்களுக்கும் இடையில் பிணக்கு ஏற்படுவதற்கான அபாய நிலையே ஏற்படும். எனவே, வடமாகாண சபையின் நிபுணர்குழு அறிக்கையின் அடிப்படையில் குடாநாட்டின் நீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கு மாற்றுத் திட்டம் ஒன்று தொடர்பில் ஆராயுமாறு கோரியதுடன் இரணைமடுத் திட்டத்திற்கென ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமையாக குடாநாட்டிற்கான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான மாற்றுத்திட்டம் ஒன்றிற்காக பயன்படுத்துமாறு வலியுறுத்தினேன்’ என்று தெரிவித்தார்.
இரணைமடுவிலிருந்து குடாநாட்டிற்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவது தொடர்பில் தீர்க்கமான முடிவினை எட்டுவதற்காக வடமாகாண சபையினால் நிபுணர்குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவின் முடிவின் அடிப்படையில் இரணைமடு நீர் விநியோகத்திட்டத்தினை கைவிட்டு அதற்கு மாற்றுத்திட்டம் ஒன்றினை பரிசீலிக்கவேண்டும் என்று வடக்கு மாகாணசபை எடுத்திருக்கின்ற உறுதியான நிலைப்பாடு தொடர்பில் மிகுந்த மகிழ்ச்சியுடன் மனம் நிறைந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
இரணைமடு குளத் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை கோருகிறது வட மாகாண குழு