ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைக்கூட்டத் தொடரினை முன்னிட்டே வலி.வடக்கில் மீள்குடியேற்றம், உயர் பாதுகாப்பு வேலி அகற்றல் என்ற நாடகத்தை யாழ். மாவட்ட இராணுவத்தளபதி நடத்தி வருகின்றார் என வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு மற்றும் புனர்வாழ்வு குழுவின் தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
24 வருடங்களுக்கு மேலாக வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் எமது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வாழ்ந்து வருகினர்.
இந் நிலையில் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் செய்யப்போகின்றோம் அதற்கான போராட்டங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம் நாங்கள் வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றம் செய்வோம் என்று யாழ். மாவட்ட இராணுவத்தளபதி தெரிவித்து வருகின்றார்.
ஜெனீவாவில் நடைபெறுகின்ற மனித உரிமைக் கூட்டத் தொடரினை முன்னிட்டு காலத்தை இழுத்தடிப்பதற்காகவும் எமது மக்களை ஏமாற்றுவதற்காகவும் இந்த அறிவிப்பை இராணுவத்தளபதி விடுத்துள்ளார்.
அதேவேளை வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைக்கப்பட்ட நிரந்தர வேலிகளை அகற்றுவதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டன. ஆனால் வேலிகளை அவர்கள் அகற்றவில்லை. தற்போது மீள் குடியேற்றப்பட வேண்டிய மக்களின் தரவுகளை தருமாறு யாழ்.மாவட்ட இராணுவ தளபதி எம்மிடம் கோரிக்கை விடுத்து இருந்தார்.
அதனடிப்படையில் வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் பிரதேச செயலகம் மற்றும் மாவட்டச் செயலகத்தில் இருந்து கிடைக்கப்பபெற்ற விபரங்களை இராணுவத்தளபதியிடம் சமர்பித்துள்ளோம்.
அதாவது வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 10 ஆயிரத்து 40 குடும்பங்களைச் சேர்ந்த 34368 அங்கத்தவர்கள் மீள்குடியேற்றம் மீள்குடியேற்றப்பட வேண்டும்.
ஆனால் மாவட்டச் செயலகத்தின் விபரங்களின் படி 5878 குடும்பங்களைச் சேர்ந்த 19765 பேர் மட்டுமே மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் என்று மாவட்டச் செயலக விபரங்கள் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் மாவட்டச் செயலருடன் கதைத்தபோது அதனை அவர் ஏற்றுக்கொள்வதாக தெரியவில்லை. வலி. வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் அவர் அக்கறையின்மையை வெளிப்படுத்தி வருகின்றார்.
வலி.வடக்கில் இருந்து இடம்பபெயர்ந்த நலன்புரி நிலையத்தில் வசிக்கும் மக்களை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றதே தவிர உறவினர்கள் நண்பர் வீடுகளிலும், ஏனைய மாவட்டங்களிலும், இந்தியாவில் தங்கியிருப்பவர்கள் தொடர்பிலும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
அத்தோடு வலி.வடக்கின் காங்கேசன்துறை, மயிலிட்டி மற்றும் பலாலி ஆகிய பிரதேசங்களை விடுவிப்பதற்கான எண்ணம் இராணுவத்திற்கு இல்லை இதற்கு பதிலாக இப்பிரதேசத்தில் வாழும் மக்களை பிறிதொரு இடத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி
வலி.வடக்கு மீள்குடியேற்றத்தினை குழப்புவதற்கு சிலர் முயற்சி