இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வடமாகாண சபையினர் இந்தத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனமாகிய ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியிருக்கின்றனர்.
இரணைமடு குளத்தைப் புனரமைத்தல், அந்தக் குளத்தில் இரந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்தல், யாழ்ப்பாணத்தில் கழிவகற்றும் திட்டத்தைச் செயற்படுத்துதல் ஆகிய மூன்று விடயங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்காகத் திட்டமிடப்பட்டிருந்த இரணைமடு திட்டமானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக இந்தக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதை இந்தக் குளத்து நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகளின் அமைப்புகள் தமக்கு ஏற்பட்டுள்ள விவசாய நீர்ப்பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி தீவிர ஆட்சேபணைகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து ஆராய்வதற்காக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் நியமிக்கப்படடிருந்த 15 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று குளத்தைப் புனரமைப்பதையும், யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதையும் வெவ்வேறு திட்டங்களாகச் செயற்படுத்தும் படியும், வேறு வளங்களைப் பயன்படுத்தி குடிநீர் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கும்படியும் பரிந்துரைத்திருந்தது.
இதற்கு அமைவாக இரணைமடு குளத்தைப் புனரமைக்கின்ற அதேநேரம், யாழ்ப்பாணத்தில் உள்ள நீர் வளங்களைப் பயன்படுத்தியும், அங்குள்ள கடலேரி நீரை நன்னீராக்குவது பற்றியும், மழைநீரைக் குடிநீருக்காகச் சேமிப்பது பற்றியும் ஆராய்ந்து செயற்படுத்துவது தொடர்பிலும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினரால் ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவராகிய வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி உயரதிகாரிகளுடனான இந்தச் சந்திப்பு திங்களன்று கொழும்பில் உள்ள அந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்தக் குழுவில் முதலமைச்சரின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், வடமாகாண அமைச்சர்களாகிய பொன்னுத்துரை ஐங்கரநேசன், பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருடன் இரணைமடு குளத்து விவசாய அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் சிவமோகனும் இடம்பெற்றிருந்தனர்.