யாழில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற விடுதி சுற்றிவளைப்பு தொடர்பாக என் மீது செய்யப்பட்டுள்ள முறைப்பாடு திட்டமிட்ட செயல் என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
‘கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலை ஆனந்தபுரத்திலுள்ள விடுதி மற்றும் யாழ்.அம்மன் வீதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையம் ஆகியன யாழ்ப்பாணப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதுடன் கூடவே நானும் இருந்தேன்.
அந்த விடுதிகளில் 5 பெண்கள் உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்கள் தற்போது நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக என் மீது யாழ்.அம்மன் வீதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தின் உரிமையாளரினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் நான் விடுதிக்குள் நுழையவில்லை. நான் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான விவகாரங்களினை கவனிக்குமாறு முதலமைச்சரினால் எனக்கு பணிக்கப்பட்டிருந்தது.
எனவே இதனை சரியாகச் செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. அந்த வகையில் முதலமைச்சருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் ஒரு உத்தியோகத்தராகவே நான் விடுதிக்குச் சென்றிருந்தேன். குறித்த விடுதிகளில் பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக எனக்கு கிடைத்த தொலைபேசி தகவல் மூலம் அங்கு சென்றேன்.
இதனைத்தொடர்ந்து, நான் பொலிஸாருக்கு இந்த விடயத்தினைத் தெரியப்படுத்தி பொலிஸாருடன் அங்கு சென்றேன். ஆனால் விடுதிக்குள் நான் உள்நுழையவில்லை. பொலிஸாரே குறித்த பெண்களை கைதுசெய்தனர். அத்துடன், அங்கு பாடசாலை மாணவிகள் இருக்கவில்லை. இதுதொடர்பாக நான் முதலமைச்சருக்கும் தெரிவித்திருந்தேன்.
பாடசாலை மாணவிகளை அல்லது நமது பெண்களை கேவலப்படுத்துவதற்கு நான் எண்ணியதில்லை. அவர்கள் தவறான வழியில் செல்லக்கூடாது என்பதைத்தான் நினைக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி