Ad Widget

முத்தையன்கட்டின் விவசாய அபிவிருத்திக்கு இராணுவம் இடையூறாக உள்ளது – விவசாய அமைச்சர்

போருக்குப் பிறகு முத்தையன்கட்டில் வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான 65 ஏக்கர் பரப்பளவுள்ள அலுவலக வளாகத்தை இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கிறது. முத்தையன்கட்டுக் குளத்தின் அலைகரையில், 35 ஏக்கர் பரப்பளவுள்ள குள ஒதுக்கீட்டுக் காணியை இராணுவம் ஆக்கிரமித்துக் கட்டிடங்களையும், பண்ணைகளையும் நிறுவியுள்ளது. இப்படி, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நடவடிக்கைகளை முழு வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்குத் தடையாக இருப்பதன் மூலம் முத்தையன்கட்டின் விவசாய அபிவிருத்திக்கு இராணுவம் இடையூறாக உள்ளது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

01

முல்லைத்தீவு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முத்தையன்கட்டில் தட்டையன் மலைப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (04.03.2014) விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் வயல் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றியபோது,

முத்தையன்கட்டுக்குளம் இலங்கையின் பிரசித்திபெற்ற நீர்ப்பாசனக் குளங்களில் ஒன்றாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளமாகவும் உள்ளது. 1965 காலப்பகுதியில் இந்தக் குளத்தை நம்பி வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானவர்கள் இங்கு குடியேற்றப்பட்டார்கள். வறுமையோடு குடியேறியவர்கள் முத்தையன்கட்டுக் குளத்தில் ஏற்று நீர்ப்பாசனத்தின் கீழ் உபஉணவுச்செய்கையில் ஈடுபட்டு விரைவிலேயே பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்தார்கள். ஆனால், நடந்து முடிந்த போர் முத்தையன்கட்டு விவசாயிகளை வறுமையின் குழிக்குள் தள்ளிவிட்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா விவசாயிகளும் வங்கிகளில் கடன் பெற்று அதனைத் திருப்பிச் செலுத்தமுடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

போர் முடிந்து ஐந்து ஆண்டுகளை எட்டியுள்ள நிலையிலும் விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. இந்த நிலை நீடிப்பதற்கு அனுமதிக்க முடியாது. அந்த வகையிலேயே, மனவிரக்தியுற்றிருக்கும் எமது விவசாயிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில், அவர்களுக்குப் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் நோக்கில், பொருத்தமான நல்லினப் பயிர்களை அறிமுகம் செய்யும் நோக்கில் அவர்களது வயல் நிலங்களுக்கே சென்று வயல் விழாவைக் கொண்டாடி வருகிறோம்.

08

காலநிலை மாற்றங்களினால் மழை பொய்த்து கிணறுகளிலும் குளங்களிலும் தண்ணீரின் அளவு குறைந்து வரும் நிலையில், விவசாயத்தில் குறைந்தளவு தண்ணீரைப் பயன்படுத்தி கூடியவிளைச்சலை அறுவடை செய்யும் பாசனமுறைகளை அறிமுகப்படுத்துவது அவசியம். இப்போது முத்தையன்கட்டில் தூவல் நீர்ப்பாசனத்தில் பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்ட மிளகாய், வெங்காயச் செய்கை வெற்றியளித்திருக்கிறது. தண்ணீர் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது மாத்திரம் அல்லாமல், தூவல் நீர்ப்பாசனம் செய்யப்பட்ட பயிர்களில் நோய்களின் தாக்கமும் பீடைகளின் தாக்கமும் குறைவடைந்தும் உள்ளது.

04

முத்தையன்கட்டுப் பிரதேசத்தின் விவசாயத்தின் எதிர்காலம் மாத்திரமல்ல, இப்பிரதேச மக்களின் வாழ்வும் முத்தையன்கட்டுக் குளத்துடனேயே பின்னிப்பிணைந்துள்ளது. குளத்தில் நீர் தேங்கினால்தான் கிணறுகளிலும் நீர்மட்டம் உயரும் நீண்டகாலமாகப் பழுதுபார்க்கப்படாமல் இருக்கும் முத்தையன்கட்டுக் குளத்தைப் புனரமைத்து அதிக நீரைத் தேக்குவது அவசியம். இதற்குத் தடையாக இராமல், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்குச் சொந்தமான அலுவலகங்களிலும் விடுதிகளிலும் நிலைகொண்டுள்ள படையினரும், குளக்கரையை ஆக்கிரமித்துப் பண்ணை அமைத்திருக்கும் படையினரும் அவற்றை எங்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

03

முல்லைத்தீவு மாவட்டப் பிரதி விவசாயப் பணிப்பாளர் தெ.யோகேஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடமாகாண சபை உறுப்பினர்கள் வீ.கனகசுந்தரசுவாமி, து.ரவிகரன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், முல்லைத்தீவு மாவட்டப் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் ந.ஸ்ரீஸ்கந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Related Posts