Ad Widget

யாழ்தேவி ஜுனில் யாழ்.செல்லும் – குமார் வெல்கம

யாழ்தேவி புகையிரதம் எதிர்வரும் ஜுன் மாதம் யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

palai-train

இதேவேளை, செப்டெம்பர் 14 திகதிக்கு முன்னர் காங்கேசன்துறைக்கும் யாழ்.தேவி புகையிரதம் செல்லவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி பளை புகையிரத நிலையம் நேற்றுக் காலை உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டதுடன் யாழ்.தேவி கடந்த 28 வருடங்களுக்கு பிறகு கொழும்பிலிருந்து பளை வரை தனது பயணத்தை செவ்வாய்க்கிழமை (4) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தது.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

‘கொழும்பு- பளை வரையான தனது பயணத்தை யாழ்தேவி இன்று (நேற்று) ஆரம்பித்துள்ளது. வெள்ளிக்கிழமை முதல் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரத சேவையையும் யாழ்.தேவி ஆரம்பிக்கவுள்ளது. இந்த சொகுசு புகையிரத சேவையானது கொழும்பிலிருந்து பளை வரை தனது சேவையினை மேற்கொள்ளும்’ என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரது வேண்டுகோளுக்கமைய புகையிரத பாதைகளை குறுக்கறுத்துச் செல்லும் பாதைகளுக்கு பாதுகாப்பு கடவை அல்லது பணியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு உடனடியாகவே நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பணிப்புரை வழங்கியமை குறிப்பிடத்தக்கது..

“இந்த புகையிரத சேவையானது கோட்டையிலிருந்து தினமும் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.28 மணிக்கு பளை சென்றடையும். மறுநாள் காலை பளையிலிருந்து புறப்படும் புகையிரதம் மதியம் கோட்டையை அடையும்” என புகையிரத திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts