காணாமல்போனோர் விடயத்துக்கு அரசுடன் இணைந்துள்ள தமிழ் கட்சியினரே பொறுப்பு – கஜதீபன்

Kajatheepan-tnaயாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் உறவினர்கள் விடும் கண்ணீருக்கு அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் பேசிக்கொண்டிருக்கும் தமிழ் அமைப்புக்களின் தலைமைகளே பதில் கூறவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.

யாழ். அனலைதீவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த மக்கள் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியின் யாழ்.மாவட்டச் செயலாளர் ப.தர்சானந், சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் ஞா.கிண்ஷக்ர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கஜதீபன், ‘காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்த காணாமற்போனோரின் உறவினர்கள் பலர் தங்கள் உறவுகளை அரச படைகளும், அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் அமைப்பினருமே வீடு புகுந்து கடத்தினார்கள் என தெரிவித்தனர்.

இவ்வாறான குற்றங்களை புரிந்துவிட்டு இன்று இணக்க அரசியல் என்று அரசாங்கத்தினால் வழங்கப்படும் பதவிகளின் சுகங்களை அனுபவித்து வரும் அமைப்புக்களின் தலைமைகள் இம்மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்’ என்றார்.

‘இப்பிரதேசத்தில் எங்களுடன் பேசியவர்கள் தமது பல தேவைப்பாடுகள் பற்றியும், ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும் வலியுறுத்தினர். நான் எமது மாகாண கல்வி அமைச்சருடன் இது குறித்து கட்டாயம் பேசி குறைபாடுகளை நிவர்த்தி செய்து தர முயற்சிக்கின்றேன்’ என்றார்.

‘அத்துடன், பாதைகள் அபிவிருத்தி பற்றிக் குறிப்பிட்டிருந்தனர். இவை பிரதேச சபைகளின் சேவை ஆகும். ஆனால் கடந்த 20 வருடங்களாக இப்பகுதியை தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டிருந்த இணக்க அரசியல் பேசும் கட்சியினரின் ஆதிக்கத்திலுள்ள ஊற்காவற்றுறை பிரதேச சபைக்கு அரசாங்கம் ரூபா 100 மில்லியனை வழங்கியதாக அறிந்திருந்தோம்.

ஆனால் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் சரி அனலைதீவிலும் சரி எவ்வித அபிவிருத்திச் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. ஆனால் 2015ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலில், நாம் இந்த சபையைக் கைப்பற்றி உண்மையான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்போம்’ என்று கூறினார்.

‘அதற்கிடையில் எமது மாகாணசபை உறுப்பினர்களுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி மற்றும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி போன்றவற்றின் மூலம் எம்மால் முடிந்த அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வோம் என உறுதியளிக்கின்றேன்’ எனவும் கஜதீபன் மேலும் தெரிவித்தார்.

Related Posts