முன்னாள் போராளிகளின் அவல நிலையினை வைத்து அரசியல் செய்வதை விட அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதாவது செய்ய அனைவரும் யோசிக்க வேண்டும்’ என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்.மாவட்டத்தினருக்கான நட்டஈட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் யுத்தத்தினாலும், வேறு காரணங்களினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டு வருகின்றன.
1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புனர்வாழ்வு அமைச்சு, மக்களுக்கான நட்டஈடு வழங்குவதில் காலதாமதப் போக்கினை கடைப்பிடித்து வந்திருந்தது.
இந்நிலையில், யுத்தம் முடிவடைந்த பின்பு இயல்பு நிலை உருவாகியுள்ளது. அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சுக்கு பெருமளவான நிதிகள் ஓதுக்கப்பட்டு, நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு யாழில் 600 பேருக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. அந்தவகையில், யாழ். மாவட்ட செயலகத்தின் புள்ளி விபரத்தின் படி சொத்துக்கள் அழிவுகள் தொடர்பான நட்டஈடு கோரி 1300 விண்ணப்பங்கள் புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் கடந்த யுத்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களில் நட்டஈடு வழங்காதவர்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. இதேபோன்றுதான் வன்னி மாவட்டத்திலும் இருக்கின்றது. அங்குள்ள மக்கள் பாரிய சொத்து இழப்புக்களைச் சந்தித்துள்ளனர்.
அம்மக்கள் எதிர்நோக்கிய சொத்து அழிவிற்கான நட்டஈட்டினை அரசாங்கம் வழங்குவதற்கு முன்வந்துள்ளதை பாராட்ட வேண்டும்.
இன்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளுக்கு இழப்பீட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கான இந்த உதவிகள் வெளிநாட்டிலிருந்து பெறவில்லை என்பது சுட்டிக்காட்டப்படவேண்டும்.
வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் முன்னாள் போராளிகளுக்கு ஒரு சதமேனும் செலவழிக்காத நிலையில், 12,000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அமைச்சு புனர்வாழ்வு அளித்து வருகின்றது.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் கோசமிட்டு, உணர்வுகளுக்கான கொடிகளையும் பிடிக்கலாம். ஆனால் அவை எம் மக்களின் வாழ்க்கைக்கு உதவுகின்றதா என்பது பற்றி யோசிக்க வேண்டும்.
அரசியல்வாதியாக இருந்தாலும், ஊடகமாக இருந்தாலும் உணர்வு ரீதியாக வரவேண்டும். 1983 ஆம் ஆண்டு முதல் இறுதி யுத்தம் வரையான காலப்பகுதியில் சொத்தழிவுகள் அதிகமாக ஏற்பட்டுள்ளன. அவர்களுக்கான நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். அந்த நட்டஈடுகள் காலதாமதமின்றி வழங்க வேண்டும்’ என நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.