இளவாலை ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற கால்பந்தாட்டப் போட்டியின்போது, ஏற்பட்ட கைகலப்பால் 10 பேர் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக இளைவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
8 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதுடன், நவரத்தினம் நாகேந்திரம் (வயது 28), நாகேஸ்வரன் ஜீவதாஸ் (வயது 27) ஆகிய இருவரும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் கூறினர்.
வலிகாமம் கால்பந்தாட்ட லீக்கானது இலங்கை கால்பந்தாட்ட லீக் தலைவர் வெற்றிக்கிண்ணத்திற்காக லீக்கிற்குட்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கிடையில் விலகல் முறையிலான கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்துகிறது. ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இதற்கான அரையிறுதிப் போட்டியில் அண்ணா விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து கல்வளை விநாயகர் விளையாட்டுக் கழக அணி மோதியது.
போட்டி நேரம் வரையிலும் இரு அணிகளும் ஒவ்வொரு கோல்களை பெற்றிருந்தமையால் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிக்க சமநிலை தவிர்ப்பு உதை நாடப்பட்டது. சமநிலை தவிர்ப்பு உதையில் கல்வளை விநாயகர் விளையாட்டுக்கழக அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்த முடிவை ஏற்காத அண்ணா விளையாட்டுக் கழகத்தின் இரசிகர்கள் கற்களாலும் தடிகளாலும் அங்கிருந்த சிலரைத் தாக்கினர். இந்த நிலையில், இராணுவத்தினரும் பொலிஸாரும் கைகலப்பை கட்டுப்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கைகலப்பால் மோட்டார் சைக்கிளொன்று சேதமடைந்ததுடன், தனியார் மினி பஸொன்றின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.