இலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அரச கரும மொழி நடைமுறைப்படுத்தலுக்காகவும் தனியான அமைச்சொன்று இயங்குகின்றது.
அதுதவிர அரசகரும மொழிகள் ஆணைக்குழு, அரச கரும மொழிகள் திணைக்களம் மற்றும் பல செயற்திட்டங்களும் மொழிக்கொள்கை அமுலாக்கலுக்காக செயற்படுகின்றன.
மும்மொழிக் கொள்கைக்காக 10 ஆண்டு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு தொடங்கியது.
இந்த மும்மொழிக் கொள்கையின் நோக்கம் பற்றி தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சரிடம் வினவப்பட்டது.
´ஆங்கில மொழி மூலம் மக்களிடையே ஆங்கிலத் திறமைகளை வளர்ப்பதும், சிங்கள- தமிழ் மொழி பெயர்ப்புகள் மூலம் இனங்களுக்கு இடையில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதும் மும்மொழி நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம்´ என்றார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார.
இலங்கையில் பிரதான இரண்டு மொழிகளான சிங்களமும் தமிழும் அரசியலமைப்பின்படி அரசகரும மொழிகள். ஆங்கில மொழி இணைப்பு மொழி என்ற நிலையில் உள்ளது.
´இணைப்பு மொழியான ஆங்கில மொழியையும், அரசியலமைப்பு ரீதியாக அல்லாமல்- நடைமுறை ரீதியில் அரசகரும மொழி என்ற அந்தஸ்துக்கு அரசாங்கம் உயர்த்தியிருக்கிறது´ என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறினார்.
நாட்டின் சகல அரச நிறுவன கட்டடங்களிலும் பெயர்ப்பலகைகளும் ஆவணங்களும் மூன்று மொழிகளிலும் அமைய வேண்டும் என்பது தான் மும்மொழி நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்ட பணி என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால், அரசின் மொழிக்கொள்கை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் தமிழ்பேசும் மக்கள் விரக்தியடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பொதுப் போக்குவரத்து வாகனங்கள், அரச கட்டடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தமிழ் எழுத்துக்கள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டுவருவதாகவும் எழுத்து மற்றும் அர்த்தப் பிழைகளுடன் பிரசுரிக்கப்பட்டுவருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
´தமிழ்மொழி இன்னும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே´ அரச நிறுவனங்களில் நடத்தப்பட்டுவருவதாக அரசின் மொழி அமுலாக்கங்கள் பற்றி முன்னைய காலங்களில் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தவர்களில் ஒருவரான எஸ். பாலகிருஷ்ணன் கூறினார்.
அரச பேருந்தொன்றில் ´கர்ப்பிணித் தாய்மார்களுக்காக´ என்று சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சரியாக எழுதப்பட்டிருக்க தமிழில் மட்டும் ´கர்ப்பிணி நாய்மார்களுக்காக´ என்று தவறாக எழுதப்பட்டிருக்கின்றமை பற்றி உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியமை தொடர்பில் அமைச்சரிடம் வினவியபோது.
´அவ்வாறு தவறுகள் நடந்துள்ள இடங்களை நாங்கள் கேள்விப்பட்டு திருத்தியுள்ளோம். நாங்கள் தான் அவற்றுக்குப் பொறுப்பேற்கிறோம்´ என்றார் அமைச்சர்.
´பஸ் டிப்போ ஒன்றை எடுத்துக்கொண்டால், அங்கு தமிழ் எழுத்துக்களை தமிழ் தெரிந்தவர்களிடமிருந்து எழுதிக் கொள்கின்றனர். ஆனால் தமிழ் எழுத்துக்களைப் புரியாத ஒருவர் தான் அவற்றை வரைந்து வர்ணம் பூசுவார். அதனால் தான் தவறு நடக்கிறது. பாராளுமன்ற பெயர்ப் பலகையிலும் இவ்வாறான தமிழ்ப் பிழை நடந்திருக்கிறது. அந்தப் பிழையை அண்மையில் திருத்தியிருக்கிறோம்´ என்றார் நாணயக்கார.
இவ்வாறான எழுத்துப் பிழைகள் மூலம் ஒரு சமூகமே அவமரியாதை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுவதை தெரிவித்தபோது- அந்தத் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்ற அமைச்சர், ´தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களிடமும் தமிழ் பேசுபவர்களிடமும் மன்னிப்புக் கோருகின்றேன்´ என்று கூறினார்.
எழுத்துப் பிழைகள் பற்றிய முறைப்பாடுகளை தமக்கு அறிவிக்குமாறு பத்திரிகைகளில் அறிவித்தல்கள் போடப்படும் என்றும் சமூக ஒருமைப்பாட்டுக்கான அமைச்சர் தெரிவித்தார்.
ஆனால் அரசாங்கம் உண்மையில் மும்மொழிக் கொள்கையினூடாக நாட்டில் இன நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமானால், இதுவரை பெரும்பாலும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் நடந்துவரும் மொழி நடைமுறைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் வரவுசெலவுத் திட்டத்திலேயே போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1956-ம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டமையை, இலங்கையில் உள்நாட்டு மோதல்கள் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக அவதானிகள் சுட்டுக்காட்டுகின்றனர்.
1987-ம் ஆண்டில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் வந்த அரசியலமைப்புத் திருத்தத்தின்படியே, தமிழ் மொழிக்கும் அரசகரும மொழி அந்தஸ்து கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.