நிஷா தேசாய் பிஸ்வால் – யாழ். ஆயர் சந்திப்பு

இறுதிப் போர் தொடர்பில் நம்பகமான விசாரணைதேவை. இந்த விசாரணை இங்கு நடத்தப்படாதுவிட்டால் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என்று மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம் என்று அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் வலியுறுத்தியதாக யாழ்.மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

vishap-amerecca

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் இன்று யாழ்ப்பாணத்திற்கான பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ்.மறைமாவட்ட ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்திருந்தார்.

சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, இன்று பயணமாகியிருந்த அமெரிக்கக் குழு தாமும் ஜெனீவாவுக்கு பயணம் செய்யவுள்ளதாகவும் அங்கு எவ்வாறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தனர்,

அதற்கு நாங்கள் பதிலளிக்கையில்,

பிரதானமாக நடந்த போர் தொடர்பிலும் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய நம்பகமான ஒரு விசாரணை நடத்துவது அவசியம். அதன் மூலமே எவளவு பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அறிந்து கொள்ள முடியும். இதற்கான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும், உயிரிழந்தவர்கள், வீடுகளை இழந்தவர்கள், விதவைகளாக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படவேண்டும்.

அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கப்படவேண்டும் எனவே இவற்றை எல்லாம் தீர்மானிப்பதற்கு ஒரு நம்பகமான விசாரணை தேவை. இந்த விசாரணை இங்கு நடத்தப்படாதுவிட்டால் வெளிநாட்டில் நடத்தப்படவேண்டும் என்று மக்களாகிய நாங்கள் விரும்புகின்றோம் என்று தெரிவித்தோம்.

இனங்களுக்கு மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான முனைப்புக்களை ஏற்படுத்துவதன் மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றும் அதற்கான முனைப்புகளை முன்னெடுக்கவில்லையா? என்று நிஷா எங்களிடம் கேள்வி எழுப்பிருந்தார். அதற்கு நாங்கள் பதிலளிக்கும் போது,

அரசாங்கம் தாம் விடுதலைப்புலிகளை ஒடுக்கவிட்டோம், இங்கு ஏற்பட்டிருந்த அனைத்து நெருக்கடிகைகளையும் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். எங்களால் தான் இந்த வெற்றி வந்தது என்ற பெருமையோடு இருக்கிறார்களே ஒழிய நல்லிணக்கத்தினைக் கொண்டுவரவோ சமாதானத்தைக் கொண்டுவருவதற்கான யோசனையோ அவர்களிடம் இல்லை என்பதை அவருக்கு விளக்கினோம்.

இறுதியாக ஜெனீவாக்கூட்டத்தொடரில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

காணாமல் போனோர் தொடர்பில் மக்கள் மிகுந்த கவலையில் இருக்கிறார்கள். கண்களுக்கு முன்பாகவே எமது உறவுகளை கையளித்தோம், அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் தொடர்பில் அரசாங்கம் ஒரு பதிலை வழங்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்றதை அவரும் ஏற்றுக்கொண்டார். இதற்கு அரசாங்கத்தை வலியுறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்ததாக யாழ்.ஆயர் தெரிவித்தார்.

Related Posts