Ad Widget

கூட்டமைப்பின் தீர்மானங்களை முறியடிக்கவும் – விமல்

vimal-weravansaவட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று தீர்மானங்களையும் முறியடிக்கக் கூடிய நடவடிக்கைகளை அவசரமாக எடுத்தல் வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு மற்றும் பொறியியல் துறை அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வட மாகாண சபை இலங்கை இறைமையை மீறி தன்னிச்சையான செயல்களில் ஈடுபடுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடருக்கும் சர்வதேச நாடுகளுக்கு கொண்டுசெல்வதற்கே வட மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்த தீர்மானங்களை அவசரமாக நிறைவேற்றியுள்ளனர் என அமைச்சர் விமல் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பிலும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தினை சர்வதேச பரிசோதனைக்கு உட்படுத்துதல், புள்ளிவிபர திணைக்களத்தினால் வடக்கில் திரப்பட்ட விபரங்கள் பிழை எனவும் அதற்காக வடக்கு மாகாண சபை ஊடாக மாவட்டம் தோறும் புள்ளி விபரங்களை சேகரித்து அறிக்கை சமர்ப்பித்தல் ஆகிய தீர்மானங்கள் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த தீர்மானங்கள் பற்றி அரசு கூடிய அவதான செலுத்தல் வேண்டும். இதற்காகத்தான் வட மாகாண சபை தேர்தலை நடத்த முன்னர் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் இல்லாமல் செய்ய வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி முன்னரே தெரிவித்தது.

இதனை அமைச்சரவையிலும் கூட தெரிவித்தோம். எமது கோரிக்கையினை ஜனாதிபதி அமுல்படுத்த நினைத்த போது எமது அரசிலும் ஒரு சில அமைச்சர்கள் எதிர்த்தார்கள். அத்துடன் நாடாளுமன்றத்திலும மூன்றிலிரண்டு பெருபான்மை வாக்குப்பலத்துடன் இந்த அதிகாரங்களை குறைக்க வேண்டும். அரசில் உள்ள சில சிறிய கட்சிகளான இடதுசாரி போக்கையுடைய கட்சிகள் தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினார்கள்.

இந்த அமைச்சர்கள் தமிழத் தேசிய கூட்டமைப்புக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவும் பாதுகாவலாளராகவும் உள்ளனர். இலங்கை மத்திய அரசின் அதிகாரத்திலுள்ள புள்ளிவிபர திணைக்களத்தின் அதிகாரத்தை மீறி வேறாக புள்ளிவிபரங்கள் சேகரிப்பதற்கு ஒரு போதும் வடக்கு மாகாண சபைக்கு அதிகாரமில்லை.

அதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்கவும் புள்ளவிபர திணைக்களத்திற்கு எதிராக குற்றஞ்சாட்டினார். அக்கட்சியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே இயங்குகின்றது. மக்கள் விடுதலை முன்னணி அரசின் வெறுப்பு காரணமாக செயற்படும்போது அது முழு இலங்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் வடக்கில் தேர்தலை உடனடியாக நடாத்தும் படி அரசிற்கு அழுத்தம் கொடுத்தன. வட மாகாண சபையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்று இலங்கைக்கு எதிரான பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றது.

இதனால் இலங்கைக்கு நன்மை கிடைக்கவில்லை. மேலும் இன்னல்களுக்கு உட்படுத்தி சர்வதேச மட்டத்தில் இந்த யோசனைகளை கொண்டு செல்வதற்கே நாமே வழிவகுத்துக் கொடுத்துள்ளோம். அத்துடன் அமெரிக்கா வடக்கில் உள்ள சில அரசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக நிதிகளை வழங்கி சில வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.

இதனை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக் கலவரத்தில் கொழும்பில் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்தனர்.ஆனால் தற்பொழுது மேல் மாகாணத்தில் நான்கு மடங்காக தமிழ் மக்கள் பெருகியுள்ளனர். ஆனால் வடக்கில் விரட்டப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை மீளகுடியேற்றுவதற்கு தமிழத் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கின்றனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி

“இன ஒழிப்பு” சொற்பதம் வேண்டாம் – முதமைச்சர்

Related Posts