வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையிட்டு கரித்து கொட்டுவதில் பிரயோஜனம் இல்லை மக்களால் தேர்வு செய்யப்பட அந்த மாகாணசபைக்கு சட்டப்படி உரிய அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை மற்றும் மன்னார் புதைகுழி ஆகிய விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றும் நிலைமைக்கு வடமாகாண சபையை தள்ளியமைக்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும். சர்வதேசத்துக்கும், உள்நாட்டில் தமிழ் தலைமைகளுக்கும் வழங்கிய ஒரு உறுதிமொழியையும் நிறைவேற்ற தவறிய இந்த அரசாங்கத்தின் போக்கு வடமாகாணசபை உறுப்பினர்களை இத்தகைய ஒரு தீர்மானத்தை எடுத்து உலக சமூகத்திடம் தீர்வை எதிர்பார்க்கும் நிலைமைக்கு தள்ளியுள்ளது எனவே இன்று இது நடந்துவிட்ட பிறகு, இங்கிருந்து கொண்டு “அய்யோ, முறையோ” என் ஒப்பாரி வைத்து எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்நாட்டில் தீர்வு காணாமல், லண்டனுக்கும், நியூயோர்கிற்கும், புது டெல்லிக்கும் ஓடுவதாக இந்த அரசாங்கம் எங்கள் மீது எப்போதும் குற்றம்சாட்டி வருகிறது. இன்று லண்டனுக்கும், நியூயோர்கிற்கும், புது டெல்லிக்கும் ஓடுவது யார்? ஜீ.எல். பீரிசும், லலித் வீரதுங்கவும், சஜின் வாசும், நாமல் ராஜபக்சவும் இன்று உலகம் சுற்றி திரிகிறார்கள்.
உள்நாட்டு பிரச்சினையை உள்நாட்டில் தீர்க்க முடியாமல் வெளிநாடுகளுக்கு சென்று சொல்லி தமது குற்றங்களுக்கு பங்காளிகளை தேடுகிறார்கள். இந்த உலக உலாவை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணத்துக்கு செல்லும்படி நான் இவர்களுக்கு சொல்லுகிறேன். அங்கு சென்று, முதல்வர் விக்னேஸ்வரனுக்கு வடமாகணசபையை சட்டப்படி நடத்துவதற்கு உரிய சூழலை ஏற்படுத்தி கொடுங்கள் என்று நான் இவர்களுக்கு சொல்லுகிறேன். அந்த சபையை விழுந்து நொறுங்காமல் காப்பாற்றுங்கள் என்று நான் இவர்களுக்கு சொல்லுகிறேன். 13ம் திருத்தத்தை அமுல் செய்வதாகவும், அதன் பிறகு அதை 13க்கு மேல் கொண்டு செல்வதாகவும், ஐநா செயலாளர் நாயகத்துக்கு வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். வடக்கு முதல்வரை அழைத்து பேசுங்கள் என் நான் ஜனாதிபதிக்கு சொன்னேன். அது நடந்தது. ஆனால், அந்த சந்திப்பில் வழங்கப்பட்ட எந்த ஒரு உறுதிமொழியும் நிறைவேறவில்லை.
யாழ்ப்பாணத்துக்கு போய் முதல்வரை தானே நேரில் சந்திப்பதாக ஜனாதிபதி என்னிடம் சொன்னார். அந்த சந்திப்பும் நடந்தது. ஆனால்,அதன்மூலம் எந்த ஒரு முன்னேற்றமும் இதுவரையில் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியதுடன், வெளிநாடுகளுக்கு போய் பங்காளிகளை தேடுவதில் பிரயோஜனம் இல்லை. வடமாகாண முதல்வரை கொழும்புக்கு அழைத்தோ அல்லது அவரை யாழ்ப்பாணத்துக்கு சென்றோ சந்திப்புகள் நடத்துவதில் பிரயோஜனம் இல்லை. மக்களால் தேர்வு செய்யப்பட அந்த மாகாணசபைக்கு சட்டப்படி உரிய அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்கட்டமாக மக்கள் ஆணையை பெற்ற முதல்வர் தன் நிர்வாகத்தை இடையூறின்றி நடத்த, அங்குள்ள ஆளுநரையும், மாகாண செயலாளரையும் இடமாற்ற வேண்டும். ஆளுனரை எடுத்துவிட்டு ஒரு தமிழ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றுகூட அவர்கள் கோரவில்லை. ஓய்வுபெற்ற ஒரு சிங்கள சிவில் அதிகாரியை நியமியுங்கள். ஒருகாலத்தில் லயனல் பெர்னாண்டோ அங்கு இருக்க வில்லையா? இது எதுவும் செய்யாமல் எங்களையும் ஏமாற்றி, சர்வதேசத்தையும் ஏமாற்ற நினைப்பீர்களாயின், உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்.
இந்த பின்னணியில் வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையிட்டு கரித்து கொட்டுவதில் பிரயோஜனம் இல்லை. அங்கு இனப்படுகொலை என்ற வார்த்தை பிரயோக பயன்பாட்டை முதல்வர் விக்னேஸ்வரன் தடுத்து நிறுத்தியுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடையுங்கள். அடுத்த முறை அந்த வார்த்தை பிரயோகத்தை அங்கு அதிகாரப்பூர்வமாக முதல்வரே பயன்படுத்தும் நிலைமையை உருவாக்கி விடாதீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்