மக்களின் ஆணையை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபையின் அனைவரும் சேர்ந்து பணியாற்ற வேண்டுமென வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்தார்.
நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கமலேந்திரனுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் கடந்த 23ஆம் திகதி வழங்கப்பட்ட அனுமதியைத் தொடர்ந்து வடமாகாண சபையின் அமர்வில் கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
‘மஹிந்த சிந்தனையென்ற நாட்டின் ஒருமைப்பட்ட திட்டத்தின் கீழ், நாங்கள் அனைவரும் செயற்பட வேண்டும். மக்கள் எந்த எதிர்பார்ப்புக்காக எங்களை அனுப்பினார்களோ அதனை நிறைவேற்றுவதற்கு நாங்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் வடமாகாண சபைக்கு ஜனாதிபதி நியாயமான வழியில் நிதியை ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் வடமாகாணத்தை அபிவிருத்தி நோக்கிக் கொண்டு செல்லவேண்டும்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும். அதனைத் குழப்பக்கூடாது. வடமாகாண சபையில் இருக்கும் ஏனையவர்கள் குழப்பாத பட்சத்தில் வடமாகாண முதலமைச்சர் வடமாகாண சபையை திறம்பட நடத்தி, வடமாகாணத்தை முன்னேற்றகரமான நிலைக்கு இட்டுச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என்றார்.
தொடர்புடைய செய்தி
வட மாகாணசபை அமர்வில் கமலேந்திரன் பொலிஸ் பாதுகாப்புடன் கலந்து கொண்டுள்ளார்