வடக்கு மாகாண சபையில் மென்போக்குடன் நடந்து கொள்ளுங்கள் என்று உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
சபையின் இன்றைய அமர்வுக்கு முன்பாக உறுப்பினர்களை நேற்று அவசரமாகச் சந்தித்தார் முதலமைச்சர். வடக்கு மாகாண சபைக்கும் அரசுக்கும் இடையில் முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் செயற்படாமல் மென்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அப்போது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார் முதலமைச்சர்.
அத்துடன் மூன்று உறுப்பினர்கள் சமர்ப்பித்துள்ள பிரேரணைகள் கடுமையானவையாக இருப்பதால் அவற்றில் திருத்தங்களைச் செய்யும் படியும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச விசாரணை, முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம், நடந்ததும் நடந்து கொண்டிருப்பதும் இனப்படுகொலை என்று பிரகடனப்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அரசுடன் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறி வுறுத்தினார் என்று அறிய முடிகிறது.
பிரேரணைகள் திருத்தம்
வடக்கு மகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதன் பின்னர் – கடந்த மூன்று மாதங்களில் – இரண்டாவது தடவையாக மாகாண சபை உறுப்பினர்களை முதலமைச்சர் நேற்றுச் சந்தித்துப் பேசினார்.
மாகாண சபையின் 23 உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். திருகோணமலையில் தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று நடந்ததால் அதில் கலந்துகொள்ளச் சென்றிருந்த சில உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
கூட்டத்தில் மூன்று பிரேரணைகள் பற்றி நீண்ட நேரம் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்ட போரால் உயிரிழந்த உறுப்பினர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் முன்வைத்த, இலங்கையில் நடந்ததும் நடந்துகொண்டிருப்பதும் இன அழிப்பு என்பதை சர்வதேசத்துக்குச் சுட்டிக்காட்டுகிறோம் என்னும் பிரேரணை, உறுப்பினர் அனந்தி சசிதர னால் முன்வைக்கப்பட்ட, வன் னியில் மாவட்டச் செயலர்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் காணாமற் போன ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் தொடர்பில் சரியான கணக்கெடுப்பை நடத்தி அதனை ஜெனிவாவிற்கு எடுத்துச் செல்லல் மற்றும் மன்னார் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் எனத் தெரிவிக்கும் பிரேரணை என்பன பற்றியே கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
இந்தப் பிரேரணைகள் காட்டமானவையாக – கடும்போக்கானவையாக – இருப்பதால் அவற்றைத் திருத்த வேண்டும் அல்லது நீக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தினார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பிரேரணையைத் திருத்தவோ கைவிடவோ முடியாது என்று உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துவிட்டார் என்றும் உறுப்பினர்கள் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி ஆகியோர் பிரேரணைகளைத் திருத்துவதற்கு இணங்கினார்கள் என்றும் தெரிகிறது.
இந்தப் பிரேரணைகள் அரசுடன் முரண்பாட்டை உருவாக்கும் என்றும் வடமாகாண சபை இயங்குவதற்கு ஏற்கனவே முட்டுக்கட்டைகள் போடப்பட்டுவரும் நிலையில் இத்தகைய கடும்போக்கு மேலும் முரண்பாடுகளை வளர்க்கும் என்றும் தெரிவித்தே உறுப்பினர்களை மென்போக்குடன் நடந்துகொள்ளுமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்களின் திருத்தப்பட்ட பிரேரணைகளே இன்று சபையில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
அரசியல் கைதிகளை விடுவிக்க எங்கள் சம்மதம் எதற்கு? – சம்பந்தன்
முள்ளிவாய்க்காலில் நினைவுச் சின்னம் அமைக்க வடக்கு மாகாண சபையில் பிரேரணை?