ஆவா குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மேலும் இருவரை மல்லாகம் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று புதன்கிழமை கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.எம்.கே.ஜெயசிங்க தெரிவித்தார்.
ஏழாலை வடக்கு மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த சிவலோகநாதன் ஜெயகிருஸ்ணா (வயது 33), ஈவினை கிழக்கைச் சேர்ந்த வரதராஜா அன்பரசன் (வயது 28) ஆகிய இருவரையும் அச்சுவேலி பொலிஸ் அதிகாரி கே.எம்.சி.பிரதீப் செனவரத்தின தலைமையிலான குழுவினர் கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.
இருவரிடமும் தற்போது விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
யாழ். கோண்டாவில் பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் அந்த வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து யாழ். மாவட்டத்தில் பல கொள்ளை மற்றும் கொலைகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் ‘ஆவா’ குழுவின் தலைவரான ஆவா வினோத் உட்பட 09 பேரை கடந்த 6ஆம் திகதி கோப்பாய் பொலிஸார் கைதுசெய்திருந்தனர். இதன் பின்னர் மேலும் 04 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
அத்துடன், இந்தக் குழுவிலிருந்து 02 புதிய கைக்குண்டுகள், 12 வாள்கள், 06 மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
ஆவா குழுவைச் சேர்ந்த ஏனையவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், இரண்டாவது தடவையாக கடந்த 17ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட 13 பேரையும் எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.