வடமாகாண சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் பெண் என்பதற்காக அவரை மிரட்டி உருட்டி பணிய வைக்க முயற்சிப்பதும், வரை அச்சுறுத்துவதும் முழுக்க முழுக்க ஜனநாயக விரோதச் செயல் என்பதுடன் அவருடைய அடிப்படை உரிமை மீறுகின்ற செயற்பாடாகும் எனவும் இதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வண்மையாகக் கண்டிக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனந்தி சசிதரன் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு அனுப்பப்படலாம் என பாதுகாப்பு அமைச்சு அமைச்சினை மேற்கோள் காட்டி கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சுரேஸ்,
‘அன்நதி சசிதரன் வடமாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது அதிகபட்ச வாக்குகள் பெற்று வெற்றிபெற்றவர். காணாமற்போன அவரது கணவருக்காகவும், அவரைப் போல் காணவர்மாரையும் பிள்ளைகளையும் காணாமல் தவிக்கின்ற ஏனையவர்களுக்காக போராடுகின்றார்.
இது அவரது கடமையும் உரிமையும் ஆகும். இதற்காகவே மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை பாதுகாப்பு அமைச்சும் கொழும்பு ஆங்கில ஊடகமும் புரிந்து கொள்ள வேண்டும்.
அனந்தி ஜனநாயகபூர்வமான தனது கருத்துக்களையும் பாதிக்கப்பட்ட தனது மக்களுக்கான கருத்துக்களையும் இங்கும் வெளிநாட்டிலும் சொல்வதற்கு சகல உரித்தும் உடையவர். ஆகவே அவரை அச்சுறுத்துவதினை விடுத்து அவரது நியாயமான கோரிக்கைகளை புரிந்து கொண்டு அவரது கணவர் உட்பட காணாமற் போனோர் பற்றி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அதனைவிடுத்து அவரை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் இனங்களுக்கிடையில் விரிசல்களையும் நம்பிக்கையீனங்களையும் மேலும் மேலும் விரிவுபடுத்தும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். உங்கள் செயற்பாடுகளினால் உங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போடாதீர்கள். இதனைச் சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.