யாழ்ப்பாணத்தில் ஐந்தாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இவ்வர்த்தக கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.
முன்பதாக நூலகத்திலிருந்து மங்கள வாத்தியம் சகிதம் பிரதான வீதியூடாக துரையப்பா விளையாட்டரங்குக்கு அமைச்சர் அவர்கள் உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்பட்டனர்.
கண்காட்சிக்கூடத்தின் பிரதான வாயிலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன் காட்சிக் கூடங்களையும் பார்வையிட்டார்.
இன்று தொடங்கியுள்ள கண்காட்சியானது நாளையும் நாளை மறுதினமுமாக மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது.
இங்கு பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிற்பாட்டாளர்களின் 250 ற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு, வடமாகாண முதலமைச்சரின் அலுவலகம், யாழ்ப்பாண வர்த்தக தொழில் துறை மன்றம், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகம், யாழ்.மாநகர சபை, இலங்கை கண்காட்சிப் பணியகம் மற்றும் இலங்கை கட்டிட அமைப்பாளர்கள் நிறுவனங்கள் ஆகியவற்றின் ஆதரவுடன் இவ் வர்த்தக கண்காட்சி இடம்பெறுகின்றது.
இங்கு உணவு, விவசாயம், வாகனங்கள், சுகாதார பராமரிப்பு, காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் காட்சிக் கூடங்களாக இடம்பெற்று அதேவேளை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல்யமான கல்விச்சேவை வழங்குனர்களின் காட்சிக் கூடங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.