தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவைத் தென்மராட்சி மறவன்புலவு வாழ்மக்கள் 101 பானைகள் வைத்துப் பொங்கிச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர்.
நெற்செய்கைக்குப் பிரசித்திபெற்ற மறவன்புலவில், வயற்கரையோரமாக அமைந்துள்ள வள்ளக்குளம் வீரகத்திப்பிள்ளையார் ஆலய வீதியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், சிறப்பு விருந்தினர்களாக அண்ணா விவசாயப்பண்ணை அதிபர் பொ.நடராஜா, தென்மராட்சி தெற்கு இரானுவக் கட்டளைத் தளபதி அல்விஸ் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
பொங்கலில் ஈடுபட்ட குடும்பங்களுக்கு சென்னை நல்லி சில்க்ஸ் நிறுவனம் அனுப்பி வைத்த வேட்டி, சீலைகள் வழங்கப்பட்டன. மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயா நிகழ்ச்சிக்கான முழு ஏற்பாடுகளையும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.