ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினம் (09) காலை ஜெருசலேம் நகரில் சனாதிபதி அலுவலகத்தில் இஸ்ரேல் ஜனாதிபதி சிமோன் பெரஸ் (Shimon Peres) அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் மூன்று மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விஜயத்தின் இறுதி கட்டமான நேற்று முன்தினம் ஜெருசலேம் சென்றடைந்தார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்துக்கு பாராட்டு தெரிவித்த ஜனாதிபதி பெரஸ் ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் அடைந்துள்ள முன்னேற்றம் அனைவரையும் கவரக்கூடிய சாதனையாகும் எனக் குறிப்பிட்டார்.
சுமார் மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அபிவிருத்தியிலும் நல்லிணக்கத்திலும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை இஸ்ரேல் ஜனாதிபதி பாராட்டினார்.
2004 சுனாமி அனர்த்தத்தின்போது இஸ்ரேலில் இருந்து கிடைத்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள், யுத்தத்தை முடித்த பின்னர் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தியின் முன்னேற்றத்தை விபரித்தார். நெடுஞ்சாலைகள், மின்சாரம், சுகாதாரம், கல்வி, தொழில் வாய்ப்புகள் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் இலங்கை கவனம் செலுத்தியுள்ளது எனக் குறிப்பிட்ட அவர் பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்து நான்கு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் மீள் நிர்மாணம், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்தல், நல்லிணக்கம் போன்ற துறைகளில் இலங்கை பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதென அவர் சுட்டிக் காட்டினார்.
செல்வமிக்க வரலாற்றையும் புலமைமிக்க மக்களையும் இலங்கை கொண்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி பெரஸ், ஆக்கபூர்வமான வெற்றியில் கவனம் செலுத்துவது முக்கியமானதெனக் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் பலஸ்தீன நிலையைப்பற்றி கலந்துரையாடியபோது இஸ்ரேலும் பலஸ்தீனமும் சமாதானமாக வாழக்கூடிய வகையில் இஸ்ரேல் பலஸ்தீன மோதலுக்கு தீர்வாக இரு அரசுகளை உருவாக்கும் ஐக்கிய நாடுகளின் பரிந்துரைக்கு இலங்கையின் ஒத்துழைப்பு கிட்டுமென ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாம் எப்பொழுதும் சமாதானத்திற்கு உதவுவோம், நாம் எப்பொழுதும் இரு அரசுகள் என்ற கொள்கைக்கு ஒத்துழைப்பு நல்கினோம் அனைத்து மக்களுக்கும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு எமது ஒத்துழைப்பு கிடைக்கும்’ என ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.
இஸ்ரேல் ஜனாதிபதி அவர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னர் ஜனாதிபதி அவர்கள் தற்பொழுது இலங்கையுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் வர்த்தக சமூக அங்கத்தினர்களை சந்தித்தார். இஸ்ரேல் வியாபாரிகளுக்கு முதலீட்டுக்கு வாய்ப்பு கிடைக்கின்ற பல துறைகள் பற்றி ஆராய்ந்ததன் மூலம் வியாபார தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டது. விவசாயம், பால் உற்பத்தி, நீர்ப்பாசனக் கைத்தொழில், தேயிலைக் கைத்தொழில் மற்றும் தொலைக்கல்வி என்பன கலந்துரையாடலுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட துறைகளாகும்.
நேற்று ஜெருசலேம் நகரின் தேசிய வனவியல் பூங்காவிற்குச் சென்ற ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் தமது விஜயத்தை நினைவுகூருமுகமாக ஒலிவ் மரக் கன்று ஒன்றை நாட்டினார். சமாதானத்தையும் சகவாழ்வையும் எதிர்பார்க்கும் முகமாக யுனெஸ்கோ மற்றும் ஐரோப்பிய சபையின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட ஒலிவ் மரச்சாலை ஜெருசலேம் நாட்டவர்களின் வனவியல் பூங்காவில் ஒரு பகுதியாக விளங்குகின்றது.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க, சனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் சரத் டீ விஜேசிங்க மற்றும் புது டில்லியில் உள்ள வதிவிட இலங்கை இஸ்ரேல் தூதர் எலோன் உஸ்பிஸ் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனா