மல்லாகம், ஊர்காவற்துறையிலும் புதிய நீதிமன்றக் கட்டிடங்கள் திறப்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்கள் மேற்படி புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதிகளை நேற்றயதினம் திறந்து வைத்தார்.

kayts04

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக முற்றாக அழிவடைந்த ஊர்காவற்துறையில் நீதிமன்ற கட்டிடத் தொகுதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் உத்தியோக பூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்றய தினம் ஊர்காவற்துறையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் சகிதம் பிரதம நீதியரசர் உள்ளிட்ட அதிதிகள் மங்கள வாத்தியத்துடனும் மாணவர்களின் இசை அணிவகுப்புடனும் நீதிமன்ற வளாகத்தினுள் அழைத்து வரப்பட்டனர்.

தேசியக் கொடியினை பிரதம நீதியரசர் ஏற்றி வைக்க பெயர்ப்பலகையினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திரை நீக்கம் செய்து வைத்தார்.

kayts05

புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன், நினைவுக் கல்லும் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து மத குருமார்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றன.

மேற்படி இக்கட்டிடம் 127 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்துரையாற்றினார்.இதில் நீதி நிர்வாகத்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

மல்லாகத்தில் நடைபெற்ற விழாவில் அதிதிகள் பாடசாலை மாணவர்களின் இசை அணிவகுப்பு மற்றும் மங்கள வாத்தியம் சகிதம் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தேசியக் கொடியினை பிரதம நீதியரசர் ஏற்றி வைத்தார்

தொடர்ந்து புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

mallaham01

மண்டபத்தில் வரவேற்புரையினை நீதியமைச்சின் செயலாளர் திருமதி கமலா டி சில்வா நிகழ்த்த நீதிமன்றம் தொடர்பான விளக்கவுரையினை மல்லாகம் மாவட்ட நீதிபதி சதீஸ்வரன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக முற்றாக அழிவடைந்த மல்லாகம் நீதிமன்றக் கட்டிடம் 176 மில்லியன் ரூபா செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஞாபகார்த்தமாக நீதிமன்ற வளாகத்தில் அதிதிகளால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டிபி பாராளுமன்ற முருகேசு சந்திரகுமார், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், உள்ளிட்ட நீதி நிர்வாகத்துறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்கள்..

mallaham10

நீதித்துறைசார்ந்தோர் மக்களுக்கு சரியான சேவையாற்ற வேண்டும்

நீதிமன்ற கட்டிடங்களிலிருந்து நீதியாளர்கள் மக்களுக்கு வழங்கும் நீதியானது மக்களுக்கு நல்ல முறையில் சென்றடைவது மட்டுமல்லாது அதனூடாக மக்கள் உரிய பயனை அடைய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், குடாநாட்டிற்கான எனது பயணம் பெறுமதியானதாக இருந்தது மட்டுமன்றி இங்கு அளிக்கப்பட்ட வரவேற்புகளும் சிறப்பாகவும் அமைந்திருந்தது.

நீதித்துறை சட்டத்தின் மூலம் எவ்வாறு பயன்களை பெற்றுக் கொள்ள முடியுமென்பதை மக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இங்கு வரும் மக்கள் பிரச்சினைகளுடன் வரும் போது உங்களை நம்பித்தான் வருகின்றார்கள். அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக சட்டத்துறை சார்ந்தோர் செயற்பட வேண்டும்.

சட்டத்துறைசார்ந்தோர் பணத்தை முக்கிய நோக்காகக் கொண்டு உழைக்காமல் சமூகத்திற்காகவும் கடமையாற்ற வேண்டுமென்பதுடன் இன்றுள்ள சூழலில் உங்கள் சேவைகள் சிறப்பானதாகவும் அமையவேண்டும்.

சட்டத்துறைசார்ந்தோர் எதிர்கால இளைய சமுதாயத்திற்காக தமது அறிவு ஆற்றல்களை பொறுப்பளிக்க வேண்டியவர்களாகவும் இருக்கின்றார்கள்.

நீதிமன்றக் கட்டிடங்களிலிருந்து நீங்கள் வழங்கப்படும் நீதியானது மக்களுக்கு நல்ல முறையில் சென்றடைவது மட்டுமல்லாது அதனூடாக மக்கள் சிறந்த பயனை அடைய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். தமக்கு நீதிமன்றங்கள் ஊடாக சரியான நீதி வழங்கப்படவில்லையென்று மக்கள் ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது என்பதுடன், மக்கள் திருப்தியுடன் செல்ல வேண்டும்.

சட்டத்துறையை பாதுகாப்பதே துறைசார்ந்தோரின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கு நாம் எல்லோரும் வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், நீதித்துறைசார்பில் மக்களுக்கான சகல உதவிகளையும் நாம் செய்யத்தயாராகவிருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றய தினம் சாவகச்சேரியிலும் நீதிமன்ற கட்டிடம் திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

சாவகச்சேரி நீதிமன்றம் திறந்து வைப்பு

Related Posts