Ad Widget

வடமாகாண சபைக்கு புதிய செங்கோல்

ஜனநாயகத்தின் அதிகாரச் சின்னமாகத் திகழும் செங்கோல் உடன் வடமாகாண சபை அமர்வு நேற்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

45 அங்குலம் நீளமாக இந்த செங்கோலினை சுழிபுரத்தினைச் சேர்ந்த சிற்பாசிரியர் க.சபாரத்தினம் உருவாக்கியுள்ளார்.

sengkool

இந்தச் செங்கோல் பால் மரத்தினாலான தண்டம் செய்தல் வேண்டுமென்ற விதிக்கமைய முழுவடிவமும், வேப்ப மரத்தினால் ஆக்கப்பட்டு பனை, பூவரசு, மஞ்சள்நுணா, கருங்காலி என்ற நான்கு மரங்களையும் இணைத்து வடக்கின் இயற்கை வளங்களைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

செங்கோலின் பீடம் 2.1 அங்குல விட்டத்தில் பித்தளை உலோகத்தினால் கலை வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உருவாக்கம் பெற்ற இனக்குழுமத்தின் தோற்றத்தின் அடிப்படை நாகமரபு என்பதை காட்டும் வகையில் பிணைந்த நாகம் 2.5 அங்குலத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், செப்பு, வெள்ளி, இரும்பு, பித்தளை, பொன் ஆகிய ஐந்து உலோகங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. பிணைந்த நாகத்தின் மேல் அமைந்துள்ள மூன்று புரிகளும் செப்பு, வெள்ளி, இரும்பு ஆகிய மூன்று உலோகங்களினால் கலை வேலைப்பாடுடன் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மேற்பகுதி மூன்று வரிவடிவங்கள் 2.1 அங்குல விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது வடக்கில் வாழும் மக்கள் பேசும் மூன்று மொழிகளையும் குறித்து நிற்கின்றது.

2.75 விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிவத்தில் வடக்கு மக்களுடைய பிரதான உணவான நெல் எனும் தானியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது செழுமை வளம் என்பதையும் குறிக்கும்.

அதன் மேற்பகுதி 3 அங்குல விட்டத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள நான்கு இதழ்களும் இலங்கையின் நான்கு மதங்களையும் குறித்து நிற்கின்றன.

இதன் மேல் சற்சதுரமான உள்பீடத்தின் நடுவில் வடிவமைக்கப்பட்டுள்ள சூரியன் வடமாகாணத்திற்குரிய கொடியில் பொறிக்கப்பட்டுள்ள சூரியனைக் குறிப்பதாகவும், இது பித்தளையினால் செய்யப்பட்டு தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது.

இதன், இரு மருங்கிலும் மஞ்சள் நுணா, கருங்காலி, பனை, பூவரசு என நான்கு மரங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இதன்மேல் 2.5 அங்குல விட்டத்தில் வடிவமைக்கப்பட்ட இதழ்கள் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைக் குறித்து நிற்கின்றன. இதன் மேற்பகுதி 6 அங்குல விட்டத்தில் கூம்பு வடிவமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் கற்பகத்தருவின் (பனை) ஓலை செதுக்கப்பட்டுள்ளது. வலம்புரிச்சங்கு ஒரு நற்காரியத்திற்கு பயன்படுத்தப்படும் புனித பொருளாகவும் கொள்ளப்படுகின்றது.

மாகாண சபையினதும், சபை தவிசாளரினதும் அதிகாரச் சின்னமாக செங்கோல் விளங்கி வருவதினால், செங்கோலின்றி வடமாகாண சபை அமர்வுகள் நடைபெற முடியாது. அவைத் தலைவர் சபைக்கு நுழையும் போதும், வெளியே செல்லும்போது படைகலசேவிதர் செங்கோலைத் தோளில் சுமந்து கொண்டு முன்னால் வர அதைத் தொடர்ந்து அவைத்தலைவர் செல்வார் என்பது குறிப்பிடத்தக்தாகும்.

Related Posts