ஜோர்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்த சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று பலஸ்தீனம் சென்றடைந்தார். அங்கு ரமல்லா நகரில் சனாதிபதி மாளிகையில் பலஸ்தீன சனாதிபதி கலாநிதி மஹமுத் அப்பாஸ் அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
நட்புறவுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பேச்சுவார்த்தையின்போது சனாதிபதி அப்பாஸ் அவர்கள் 2008ஆம் ஆண்டிலும் 2012ஆம் ஆண்டிலும் தாம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தை நினைவுகூர்ந்தார்.
உங்களை வரவேற்க கிடைத்த வாய்ப்பை நான் கௌரவமாகக் கருதுகிறேன் எனத் தெரிவித்த கலாநிதி அப்பாஸ் அவர்கள், பலஸ்தீனத்துக்கும் இலங்கைக்குமிடையில் நீண்டகால நட்புறவு நிலவுவதாகக் குறிப்பிட்டார். நமது இரு நாடுகளும் நல்ல தொடர்புகளைப் பேணுகின்றன. அது மேலும் மேலும் வளர்ச்சியடையும் என நான் நம்புகிறேன் என அவர் தெரிவித்தார்.
பலஸ்தீனத்தின் வியாபாரத்திற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பில் இலங்கை வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த கலாநிதி அப்பாஸ் அவர்கள், ஐக்கிய நாடுகளின் அங்கத்துவம் அல்லாத கண்காணிப்பு அரச அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ள வழங்கிய ஒத்துழைப்பை பெரிதும் மதிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
சனாதிபதி அப்பாஸ் அவர்கள் இஸ்ரேலுடனான தற்போதைய சமாதான செயற்பாட்டைப்பற்றி சனாதிபதி ராஜபக்ஷ அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
உங்களுடைய வியாபாரத்துக்கு இலங்கை எப்பொழுதும் ஒத்துழைப்பு நல்கும் எனத் தெரிவித்த ராஜபக்ஷ அவர்கள் மிக விரைவில் சுயாதீன பலஸ்தீன அரசொன்று உருவாவதைக் காண்பதே எமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகள் தொடாந்து வலுவடைந்து வருவதாக சனாதிபதி குறிப்பிட்டார்.
இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி செயற்பாடு தொடர்பாக ராஜபக்ஷ அவர்கள் பலஸ்தீன சனாதிபதிக்குத் தெளிவுபடுத்தினார்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கடந்த 04 ஆண்டுகளில் இலங்கை புனரமைப்பு, மீள் குடியேற்றம், புனர்வாழ்வு, சமூகமயப்படுத்தல், நல்லிணக்கம் ஆகிய துறைகளில் தனித்துவமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது எனத் தெரிவித்த ராஜபக்ஷ அவர்கள், வட மாகாணசபை தேர்தல் தொடர்பாக அப்பாஸ் அவர்களுக்கு விளக்கினார்.
2009ஆம் ஆணடின் பின்னர் எத்தகைய பயங்கரவாத நடவடிக்கையும் இலங்கையில் இடம்பெறவில்லை எனத் தெரிவித்த சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள், நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகின்றபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு அதிகளவு வளங்கள் செலவிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார். இலங்கை அரசு தீவிர கவனம்செலுத்தி எல்.ரி.ரி.ஈ. சிறுவர் போராளிகள் அனைவருக்கும் புனர்வாழ்வளித்து சமூகமயப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் அரச தலைவர்கள் இருவரும் ஸ்ரீ லங்கா – பலஸ்தீன ஒருங்கிணைந்த குழுவை அமைக்கும் உடன்படிக்கையிலும் மஹிந்த ராஜபக்ஷ தொழிற்பயிற்சி நிலையத்தை அமைக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் சஜின் த வாஸ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள் திருமதி கமலா ரணதுங்க. ரொஷான் ரணசிங்க, சனாதிபதி செயலாளார் லலித் வீரதுங்க ஆகியோரும் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இலங்கை பலஸ்தீன் உறவுகள்
- 1988 இல் இலங்கை பலஸ்தீனை ஒரு அரசாக அங்கீகரித்தது.
- 1975 ஜுலை 01 ஆம் திகதி பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தூதுவராலயம் இலங்கையில் தாபிக்கப்பட்டது. பின்னர் அது 1989 பெப்ரவரி 06ஆம் திகதி பலஸ்தீன் தூதுவராலயம் என பெயர் மாற்றப்பட்டது.
- 2007 ஆம் ஆண்டு இலங்கை ரமல்லாவில் ஒரு பிரதிநிதிகள் அலுவலகத்தை அமைத்தது.
- பலஸ்தீன் நட்புறவுச் சங்க இலங்கைக் குழுவின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய சேவைகளை கௌரவித்து 2007 நவம்பர் மாதம் ரமல்லாவில் உள்ள இலங்கைப் பிரதிநிதி அலுவலகத்தின் முன்னால் உள்ள வீதி மேன்மைதங்கிய மஹிந்த ராஜபக்ஷ வீதி எனப் பெயரிடப்பட்டது.
- ஜனாதிபதி ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் 2008 இலும் 2012 இலும் இரண்டு முறை இலங்கைக்கு விஜயம்செய்தார்.
- 2012 இல் ஜனாதிபதி அப்பாஸ் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இலங்கைக்கும் பலஸ்தீனுக்குமிடையே வருமான வரிகள் தொடர்பில் இரட்டை வரி தவிர்ப்பு தொடர்பான இருதரப்பு உடன்படிக்கையில் இலங்கையும் பலஸ்தீனும் கைச்சாத்திட்டன.
- இரு நாடுகளுக்குமிடையே அரசியல் ஆலோசனை தொடர்பான உடன்படிக்கையில் இருநாடுகளும் 2012 இல் கைச்சாத்திட்டன.
- 2012 பெப்ரவரி மாதம் ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஒரு விசேட தூதுவராக பாராளுமன்ற உறுப்பினர் திரு. நாமல் ராஜபக்ஷ பலஸ்தீனுக்கு விஜயம் செய்தார்.
- பலஸ்தீன் மக்களின் மனித உரிமைகள் தொடர்பான ஐ நா குழுவுக்கு இலங்கை தொடர்ச்சியாக 38 வருடங்கள் தலைமைதாங்கியுள்ளது.
- 1988 ஆம் ஆண்டு பலஸ்தீன் தேசிய பேரவை அல்ஜீரியாவில் நாடு கடந்த பலஸ்தீன அரசை பிரகடனப்படுத்திய போது, இலங்கையும் மாலைதீவுமே நாடு கடந்த பலஸ்தீன் அரசை அங்கீகரித்த உலகின் முதல் நாடுகளாகும்.
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 1975 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட இலங்கை பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் ஒரு ஸ்தாபக அங்கத்தவராவார்.
- பலஸ்தீனின் சுற்றுளா மற்றும் பண்டையச் சின்னங்கள் அமைச்சர் இலங்கையில் நடைபெற்ற எக்ஸ்போ 2012 கண்காட்சியில் கலந்துகொண்டார்.
மூலம்: மத்திய கிழக்கு பிரிவு, வெளிவிவகார அமைச்சு