காசோலை மோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகளைப் பதிவுசெய்கின்றபோது பொலிஸார் இப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தம்மிடமிருந்து 10 வீதமான தொகையை இலஞ்சமாகக் கோருகின்றனர் எனவும் அதனைக் கொடுக்க மறுக்கின்ற சந்தர்ப்பத்தில் அப்பிரச்சினைகளை தீர்க்கமுடியாது என தெரிவிக்கின்றனர் எனவும் யாழ். மாவட்ட வர்த்தகர்களின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண வர்த்தகத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாண வர்த்தகர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனிற்கும் யாழ். வர்த்தக சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையில் அண்மையில் யாழ். வர்த்தக சங்க மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச் சந்திப்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
வடக்கில் தற்பொழுது தோற்றுவிக்கப்பட்டுள்ள திறந்தபொருளாதார கொள்கைக்கமைவான வியாபார நடவடிக்கைகளினால் யாழ். மாவட்டம் உள்ளிட்ட வடபகுதி வியாபாரிகள் கடுமையான பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்றனர். மொத்த வியாபாரிகள் அளவுக்கதிகமான பொருட்களை களஞ்சியப்படுத்தி வைக்கின்றமை, வெளிமாவட்ட வியாபாரிகள் வடக்கிலுள்ள சந்தைகளை ஆக்கிரமித்துள்ளமை, வங்கிகளின் நடவடிக்கைகள், காசோலை மோசடிகள் போன்ற செயற்பாடுகளினால் எமது வர்த்தகர்கள் நட்டமடைந்து வருகின்றனர்.
வடக்கிலுள்ள வியாபாரிகளின் தொழில் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ள நிலையில் இவர்கள் தற்கொலை செய்யவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் வர்த்தக முறைகேடுகள், காசோலை முறைகேடுகள் தொடர்பான பிணக்குகளைத் தீர்ப்பதற்காக பொலிஸாரிடம் செல்கின்ற போது பொலிஸார் வியாபாரிகளிடம் இலஞ்சம் கோருவதாகவும் காசோலை மோசடிகளை தீர்ப்பதற்கு பிணக்குக்குரிய இரு பகுதியினரிடமிருந்தும் பிணக்கு தொகையின் 10 வீதத்தை இலஞ்சமாகக் கோருவதாகவும் பல வியாபாரிகள் எம்மிடம் முறையிட்டுள்ளனர். இம்முறைப்பாடுகள் தொடர்பாக ஆராயுமிடத்து வர்த்தகர்களின் முறைப்பாடுகள் உண்மை என்பதை எம்மால் உறுதிப்படுத்தக் கூடியதாகவுள்ளது. எனவே இவ் விடயங்கள் தொடர்பாக வடமாகாண சபையில் தெரியப்படுத்தி எமது வியாபாரிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தங்களிடம் கோரிக்கை முன்வைக்கின்றோம் என்றனர்.
தொடர்புடைய செய்தி
வர்த்தகர்களின் பிரச்சனைகளை தீர்க்க நியதிச் சட்டம் கொண்டுவரல் வேண்டும்