விக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவது நாட்டுக்கு நல்லதல்ல – ஜனாதிபதி

mahintha_CIவிக்னேஸ்வரன் வடக்கு முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுவது நாட்டுக்கு நல்லதல்ல. யாழ்ப்பாணம் சென்று நான் அவரைப்பார்க்கிறேன். இல்லாவிட்டால் உடனடியாக கொழும்புக்கு அழைத்து அவருடன் கலந்துரையாடுகின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் பிறந்த நாளான நேற்று அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் இனப் பிரச்சினை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேசித் தீர்க்க வேண்டும். அதுவரை மாகாணசபை தனது நிர்வாகத்தை நடத்தாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. வடக்கு மாகாண சபையில் பல முடிவுகள் தன்னிச்சையாக – ஒரு தலைப் பட்சமாகவே எடுக்கப்படுகின்றன. இது வடக்கு மாகாண சபையின் செயற்பாட்டுக்கு நல்லதல்ல.

வடக்கு முதல்வரும், ஆளுநரும் முரண்பட்டுக் கொள்கின்றனர். இது நல்லதல்ல. இந்த முரண்பாட்டின் உச்சமாக விக்னேஸ்வரன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லது அல்ல.

நான் யாழ்ப்பாணம் சென்று அவரைச் சந்திப்பேன். அல்லது விக்னேஸ்வரனைக் கொழும்பு வரும்படி அழைப்பு விடுகிறேன். எனது செயலாளர் லலித் வீரதுங்கவிடம் உடனடியாக இதுபற்றிப் பணிப்புரை விடுப்பேன்.

வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்குத் தேர்தலை நடத்தினேன். அந்த மாகாண சபை சுமூகமாக நடக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.

ஆளுநரும், முதல்வரும் முரண்படக் கூடாது. ஒருவரை ஒருவர் அனுசரிக்க வேண்டும். செயலாளர்களை மாற்றுவது பற்றி எனக்குச் சரியான தகவல்கள் இல்லை. இவை என்னிடம் நேரடியாகச் சொல்லப்படவேண்டும். மாகாண சபை நிதி ஒழுங்குகள் பற்றிய சட்டம் இருக்கிறது.

அதை இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் அக்கறை கொண்டு என்னிடம் ஆரம்பத்தில் கூறியுள்ளார். முதல்வரிடம் இதுபற்றி நான் உடனடியாக உரையாடுகிறேன்.

வடக்கு மாகாண சபையை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், வடக்கின் பாடசாலைகளுக்குச் சென்று இனவாதம் கக்கும் பரப்புரைகளைச் செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவந்துள்ளது.

தமிழ், சிங்கள இனத்தவர் மத்தியில் இனவாத பிளவை ஏற்படுத்த இவர்கள் முயற்சி செய்கிறார்கள். இனவாதப் பிரசாரத்தை பாடசாலை மாணவர் மத்தியில் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு எடுத்து கூறுங்கள் – என்று தெரிவித்துள்ளார்.

Related Posts