கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்டார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஒருவரை எதிர்வரும் 31ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
இந்தச் சந்தேக நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மேற்படி சந்தேக நபரை மட்டுவில் பகுதியில் சாவகச்சேரி பொலிஸார் திங்கட்கிழமை இரவு கைதுசெய்தனர்.
தென்மராட்சி, பாலாறு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்குச் சென்ற இரு கொடிகாமம் பொலிஸாரை அங்கிருந்த சிலர் தாக்குவதற்கு முற்பட்டனர். இதனால் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளாது அங்கிருந்து பொலிஸ் நிலையம் திரும்பினர்.
இதனைத் தொடர்ந்து 5 பொலிஸ் பிரிவுகளின் பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கையொன்றை பாலாறு பகுதியில் திங்கட்கிழமை பகல் மேற்கொண்டனர். இருப்பினும், இந்தச் சோதனையின்போது எவரும் கைதுசெய்யப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை இரவு மேற்படி சந்தேக நபரை கொடிகாமம் பகுதியில் பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டு அவரைப் பிடிப்பதற்கு முயன்றபோது, இவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் மட்டுவில் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.