தொடரும் தற்காலிக தொண்டர்களின் போராட்டம், நோயாளர்கள் சிரமம்

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர் ஊழியர்களின் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

hospital-stjons

யாழ். போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் தற்காலிக தொண்டர் ஊழியர்கள் நிரந்தர நியமனம் கோரி கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி முதல் போதனா வைத்தியசாலை வளாகத்தில் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 4 வருடங்களாக ஒரு நாளைக்கு 175 ரூபா என்ற வேதனத்துடன் தொண்டர்களாக பணியாற்றி வந்தவர்கள் புறக்கணிப்பட்டு, புதிய சிற்றூழியர்கள் நியமனத்தில் வெளிநபர்கள் இணைத்துக் கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இன்று கருத்துத் தெரிவிக்கையில், ‘நாங்கள் நிரந்தர நியமனத்தில் புறக்கணிக்கப்பட்டதினால் மனரீதியான உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றோம். போராட்டத்தில் ஈடுபட்ட சில தொண்டர்கள் மயங்கி வீழ்ந்துள்ளனர். எங்களுடைய இந்தப் போராட்டத்திற்கு விரைவில் முடிவு கிடைக்காவிட்டால் இனிவரும் நாட்களில் நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக’ தெரிவித்தனர்.

இந்நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராஜா இன்று காலை பேராட்டத்தில் ஈடுபடும் தொண்டர்களைச் சந்தித்துள்ளார்.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘உங்கள் நியமனம் தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சருக்கும் பாரம்பரிய சிறிய கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவிற்கும் தெரியப்படுத்தியுள்ளேன். உங்கள் பிரச்சினைக்கான தீர்வு விரைவில் எட்டப்படும் என அவர் தெரிவித்தார்

தொண்டர்களின் போராட்டம் காரணமாக நோயாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களை தொண்டர்களே இதுவரை காலமும் விடுதிகளுக்கு கொண்டு சென்றனர். எனினும் அவர்கள் தற்போது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதினால் நோயாளர்களின் உறவினர்களே பெரும் சிரமங்களுக்கு மத்தியில் நோயாளிகளை விடுதிகளுக்குக் கொண்டு செல்கின்றனர்.

அத்துடன், சத்திர சிகிச்சை பிரிவு, கதிரியிக்கப் பிரிவு ஆகியவற்றிற்கு நோயாளர்களை தாதியர்களே தற்போது கொண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts