மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாத நிலை – சுகாதாரப் பணிப்பாளர்

Ketheeswaranயாழ்.மாவட்டத்தில் 44 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் 17 வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லை. இருப்பவர்களைக் கொண்டு வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய நிலை நிலவுகிறது என யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

அண்மையில் சங்கானை அரசினர் பிரதேச வைத்தியசாலைக்கு மாகாண சுகாதார அமைச்சர் எஸ்.சத்தியலிங்த்துடன் வருகை தந்து அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்.மாவட்டத்தில் இயங்கி வரும் பிரதேச வைத்தியசாலைகளை ஆதார வைத்தியசாலைகளாகத் தரம் உயர்த்துமாறும், சங்கானைப் பிரதேச வைத்தியசாலையையும் அவ்வாறு தரமுயர்த்துமாறும் சுகாதார அமைச்சருக்குக் கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால் தெல்லிப்பழை, சாவகச்சேரி, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை வைத்தியசாலைகள் மட்டுமே ஆதார வைத்தியசாலைகளாக தரமுயர்த்தப்பட்டன. ஆனால் சகல வசதிகள், வளங்களுடன் இயங்கி வரும் சங்கானை வைத்தியசாலை தரமுயர்த்தப்படவில்லை.

இதேவேளை, இந்த வைத்தியசாலை வளாகத்தில் சிறுவர் வைத்தியசாலையை நிறுவித் தருமாறும் வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கம் எனக்கு ஒரு கோரிக்கையைக் கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் விடுத்திருந்தது.

யாழ்.மாவட்டத்தில் புதிதாக எந்த ஓர் இடத்திலும் எம்மால் வைத்தியசாலைகளை நிறுவ முடியாது. ஏனெனில் இயங்கி வரும் 44 வைத்தியசாலைகளிலும், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க ஆளணிப் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

இதனால் இந்த வைத்தியசாலைகளின் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னர் இது பற்றி ஆராயலாம் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர், வைத்தியசாலையின் சலக விடுதிகளையும் பார்வையிட்டார். அமைச்சருக்கு ஒவ்வோர் விடுதியின் தன்மைகள் பற்றியும் வைத்தியசாலை பொறுப்பு வைத்தியர் ரி.பிரகாஸ் போதிய விளக்கங்களை அந்தந்த விடுதிகளில் வைத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts