“தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை அணிதிரட்டி மாபெரும் சாத்வீகப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும். இதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாது.”
இவ்வாறு இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷியிடம் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
இலங்கையில் போரின் பின்னரான புனர்வாழ்வு மற்றும் நல்லிணக்க விடயங்கள் குறித்து ஆராய்வதற்காகக் கொழும்பு வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷிக்கும் இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நேற்றிரவு கொழும்பு – ஹில்டன் ஹோட்டலில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போதே இலங்கை அரசுக்கு சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை.
வடக்கு, கிழக்கில் இராணுவ மயமாக்கல் தொடர்கின்றது. அங்கு சிங்களக் குடியேற்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகின்றது.
வலி.வடக்கு, சம்பூர் மக்கள் இன்னும் மீள்யேற்றப்படவில்லை. யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமிழ் மக்களின் வீடுகள், இந்துக் கோவில்கள் மற்றும் பாடசாலைகளை இராணுவத்தினர் இடித்தழித்து வருகின்றனர்.
இதனை நேரடியாகப் பார்வையிட அண்மையில் சென்ற வடக்கு மாகாண முதலமைச்சருக்கு இராணுவத்தினர் தடைவிதித்து அவரைத் திருப்பியனுப்பியுள்ளனர்.
வடக்கு மாகாணசபையில் முதலமைச்சர் தமது பணிகளைத் தொடங்க மத்திய அரசு தொடர்ந்து முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகின்றது. மாகாணசபைக்குரிய அதிகாரங்களை மத்திய அரசு வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவீனங்களுக்கே அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், பாதுகாப்பு செலவீனங்களுக்கு அரசு ஏன் இவ்வளவு நிதியை ஒதுக்கியுள்ளது?
இலங்கை அரசின் தான்தோன்றித் தனமான நடவடிக்கைகளினால் நாட்டில் நல்லிணக்கத்துக்குரிய வழியே இல்லாமல் உள்ளது. இலங்கைக்கான ஜப்பானின் விசேட சமாதான பிரதிநிதியாக நீங்கள் 2002 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டதன் பின்னர், 23 ஆவது தடவையாக இலங்கைக்கு தற்போது வந்துள்ளீர்கள்.
24 ஆவது தடவையாகவும் நீங்கள் வரும்போதும் இதே நிலைமைதான் இங்கு இருக்கும். முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் இந்த அரசு எடுக்கவேமாட்டாது – என்றார்.
சம்பந்தன் எம்.பியின் இந்தக் கருத்துக்களுக்கு யசூசி அகாஷி பதிலளிக்கும்போது, வடக்கு மாகாண சபைக்கு அதிகாரங்களை வழங்குமாறு நான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நடத்திய சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளேன். நீங்கள் எதற்கும் அவசரப்படாமல் கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எல்லாம் நல்லபடி நடக்கும் – என்றார்.
இரண்டரை மணி நேரம் நடை பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன். செல்வம் அடைக்கலநாதன், பொன்.செல்வராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.