வலி. வடக்கு பிரதேசத்தில் இடம்பெறும் வீடழிப்பு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் வடமாகாண சபையின் மூன்றாவது அமர்வில் கலந்தாலோசித்து எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானம் எடுக்கப்படுமென வலி.வடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் தெரிவித்தார்.
வலி. வடக்கு மீள்குடியேற்ற சங்கத்தின் விசேட கூட்டம் வலி. வடக்கு பிரதேச சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றது. இது குறித்து கருத்துத் தெரிவித்த குணபாலசிங்கம்,
‘எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறும் வட மாகாண சபையின் மூன்றாவது அமர்வின் போது, வடமாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து எதிர்காலத்தில் எவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது தொடர்பான தீர்மானம் எடுப்பதாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழிற்கு வருகை தரும் வெளிநாட்டு தூதுவர்கள், பிரதிநிதிகள் வலி. வடக்கு நலன்புரி நிலையத்திலுள்ள மக்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளும் போது, அவர்களைச் சந்தித்து எமக்குத் தேவையான விடயங்களை அவர்களுக்குத் தெரிவிக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டுமெனவும் இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக’ அவர் மேலும் தெரிவித்தார்.