இலங்கையில் எல்லாத் துறைகளைப் போலவுமே கல்வியும் இராணுவ மயப்படுத்தப்படுகிறது. அதிபர்களுக்கும் பல்கலைக்கழகப் புகுமுக மாணவர்களுக்கும் இராணுவ முகாம்களுக்கு அழைத்துத் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகிறது. இது ஜனநாயகப் பண்புகளுக்கு மாத்திரம் அல்லாமல் கல்வி வளர்ச்சிக்கும் எதிரானது என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க. பாடசாலையின் 78வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் சனிக்கிழமை (07.12.2013) அன்று நடைபெற்றது. பாடசாலை அதிபர் திருமதி. சரோஜினி ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மேலதிகாரிகள் இட்ட கட்டளையைச் சிரம்மேற்கொண்டு, கேள்விகள் எதுவும் இல்லாமல் நிறைவேற்றுவதுதான் இராணுவத்தின் இயல்பு. இதனால், இராணுவ முகாம்களில் வழங்கப்படும் தலைமைத்துவப் பயிற்சி, தலைமைத்துவப் பண்புகளைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாகத் தலைமைக்கு அடிபணிந்துபோகும் மனோநிலையையே உருவாக்கும். இதன்மூலம் இலங்கை அரசு நாடளாவியரீதியில் பொதுசன மனோநிலையை தன்னிடம் கேள்விகள் எதுவும் கேட்காத ஒரு நிலைக்கு இட்டுச் செல்லவே விரும்புகிறது. ஆனால், ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்பதை அடிப்படையாகக் கொண்ட கல்வித்துறைக்கு இராணுவத்தின் இந்த அடிபணிந்துபோகும் பண்பு முற்றிலும் எதிரானது.
ஆசிரியம் என்பது கூலிக்கு மாரடிக்கும் ஒரு தொழிலல்ல. இது உள்ளத்தில் இருந்து ஊற்றெடுக்கும் ஒரு கலை. கண்காணிப்பு, கண்டிப்பு போன்றவற்றின் மத்தியில் இது முளைவிட்டு வளரமாட்டாது. ஆனால், துர்திர்ஷ்டவசமாக எமது சூழலில் ஆசிரியர்கள் அதிபர்களுக்கும், அதிபர்கள் வலயக்கல்வி அதிகாரிகளுக்கும், வலயக்கல்வி அதிகாரிகள் மாகாணக் கல்விப்பணிப்பாளர்களுக்கும், மாகாணக் கல்விப்பணிப்பாளர்கள் ஆளுநருக்கும் அஞ்சி ஓடுங்குகின்ற தன்மையே இதுகாலவரை இங்கு நீடித்தது. இப்போதும் இந் நிலையில் மாற்றம் பெரிதாக ஏற்படவில்லை. வடக்கில் மாகாண அரசு ஒன்று அமைந்திருக்கும் சூழலிலாவது கல்வித்துறைக்குச் சுதந்திரம் கிடைப்பதை நாம் உறுதி செய்தாகவேண்டும்.
அறிவியல் வரலாறு இரத்தமும் சதையுமாக மூன்று உதாரணங்களை எம்முன்னால் வைத்திருக்கிறது.
பூமி தட்டையானது என்றும், பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்றும் ஒரு காலத்தில் நம்பப்பட்டது. கலிலியோ கலிலி ஆதாரங்களோடு பூமி உருண்டையானதென்றும், சூரியனைச் சுற்றியே பூமி வலம் வருகிறதென்றும் தனது கருத்துகளை முன்வைத்தபோது அப்போதிருந்த அதிகாரவர்க்கம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தது. கலிலியோ விசாரணைமன்றின் முன்னால் நிறுத்தப்பட்டபோது, உயிர் தப்புவதற்காகப் பூமி தட்டையானது என்றும், பூமியே பிரபஞ்சத்தின் மையம் என்றும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதனால் அவருக்கு உயிர்ப்பிச்சை அளிக்கப்பட்டாலும் நிரந்தரமாகவே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர், இவரிடம் ஒருவர் விசாரணையின்போது ஒத்துக்கொண்ட கருத்து உண்மைதானா என்று கேட்டபோது, பூமி தட்டை என்று நான் சொன்னதற்காகப் பூமி ஒருபோதும் தட்டையாகி விடாது என்று பதிலளித்துள்ளார். கடைசியில் கண்கள் குருடாகி, பார்வையிழந்து வீட்டுக்காவலிலேயே கலிலியோ உயிர் துறந்தார். இவர் முதலாவது உதாரணம்.
எதனையும் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளுக்கு உட்படுத்தும் அறிவியலின் திறவுகோலை முன்வைத்தவர் சோக்கிரட்டீஸ். இவரும் அதிகாரவர்க்கத்தால் விசாரணை மன்றத்தின் முன்னால் நிறுத்தப்பட்டபோது, கலிலியோ கலிலியைப் போன்று தனது கருத்துகளைத் தவறு என்று ஏற்றுக்கொண்டு உயிர்பிழைக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், தன்னைப் புதைத்துத் தன்கருத்தை வாழவிடுவது என்று முடிவெடுத்து மரணதண்டனையை ஏற்றுக்கொண்டார். இவர் இரண்டாவது உதாரணம்.
விசாரணையின்போது உயிர்தப்புவதற்காகப் பொய்யாகவேனும் தனது கருத்தை நிராகரித்த கலிலியோ கலிலி, உயிர்போனாலும் பரவாயில்லை என்று தனது கருத்தைத் தொடர்ந்து வலியுறுத்திய சோக்கிரட்டீஸ் தவிர இன்னுமொரு உதாரணத்தினர் மூன்றாவதாக உள்ளனர். இவர்கள் அதிகாரபீடம் சூரியனைப் பார்த்துச் சந்திரன் என்று சொன்னால் ஆமாம் சந்திரன் என்றும், வட்டத்தைக் கீறிச் சதுரம் என்றால் ஆமாம் சதுரம் என்றும் தங்களது நலன்களுக்காக ஆமாம் சாமிபோடும் அடிவருடிகள். இந்த மூன்று உதாரணர்களிலும் நாம் எதுவாக இருக்கப்போகின்றோம் என்பதிலேயே எங்களது கல்வி வளர்ச்சி தங்கியுள்ளது. கல்வி வளர்ச்சிக்கு யாரிடமும் அடிபணியாத, எதற்காகவேனும் விட்டுக்கொடுக்காத சிந்தனைச் சுதந்திரம் அவசியம். சிந்தனைச் சுதந்திரத்தில் இருந்துதான் சரியான ஆய்வும், சரியான ஆய்வில் இருந்துதான் எமது சமூக முன்னேற்றத்துக்கான புதிய கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்த முடியும். இதனை எமது அரசியல் சுதந்திரமே சாத்தியமாக்கும் என்று தெரிவித்தார்.
தொடர்புடைய செய்தி