வடக்கு மாகாணசபை ஒன்று உருவாக்கப்படிருக்கும் நிலையில், இனிமேலாவது வடக்கு மாகாணத் திணைக்களங்கள், பாடசாலைகள் எல்லாவற்றிலும் மாகாணக் கொடியை ஏற்றுவதற்கெனவும் ஒரு கம்பத்தை ஒதுக்கி வையுங்கள் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
மன்னார் வெள்ளாங்குளம் அ.த.க பாடசாலையில் கடந்த சனிக்கிழமை (07.12.2013) இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த அவரைத் தேசியக்கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை அவர் நிராகரித்ததன் பின்னர் தேசியக்கொடியை மடு வலயப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜே.அன்ரனியும், பாடசாலைக்கொடியைத் திருமதி சரோஜினி ரவீந்திரனும் ஏற்றி வைத்தார்கள். அங்கு மாகாணக்கொடிக்கென கொடிக்கம்பம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் பின்னர் இடம்பெற்ற பிரதம விருந்தினர் உரையின்போதே பொ.ஐங்கரநேசன் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் தேசியக்கொடியில் வாளேந்திய சிங்கம் நிற்கும்வரையில் தமிழர்களின் தேசியக்கொடியாகவும் அதனைக் கருதமுடியாது என்றும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான தேசிய அடையாளமாக சிறுத்தையே பொருத்தமானது என்றும் தனது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அவர் கூறி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.