கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த நவம்பர் முதலாம் திகதியன்று வேரவில், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களில் முறையான சுகாதார வழிகாட்டலின் பின்னர், தாய்மார் சுயவிருப்பத்தின் பேரில் கருத்தடையை ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுப்பதற்குரிய கால அவகாசம் வழங்கப்படாமையே இந்த விடயத்தில் குற்ற உணர்வு மற்றும் சமூக நெருக்கீடு ஏற்படக் காரணமாகியுள்ளது என வடமாகாண சுகாதார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
மேலும், ‘போருக்குப் பின்னரான இந்தக் காலப்பகுதியில், போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ள வடபகுதி மக்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதற்கான அவசியமோ அவசரமோ தற்போது இல்லை’ என்று கருதுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் கூறியுள்ளார்.
வேரவில், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளினால் பெண்களுக்கு கருத்தடை கட்டாயமாக வழங்கப்பட்டிருந்ததாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன.
அதனையடுத்து வடமாகாண சுகாதார அமைச்சு, விசேட விசாரணைக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை நடத்தியிருந்தது. இந்தக் குழுவின் அறிக்கை வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால் அமைச்சின் வவுனியா அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் பொறுப்புக் கூறல், அடிப்படை சுகாதார வசதிகள் மற்றும் மகளிர் குடும்ப சுகாதார உரிமை என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் குடும்பத்திட்ட முறைகள் அனைத்தையும் தமிழ்மொழியில் வழங்கவும், குடும்பத்திட்டம் தொடர்பாக பயனாளர்கள் தமது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முடிவுகளை மேற்கொள்வதற்கு வசதியாக போதிய கால அவகாசம் வழங்கவும் வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குடும்பத்திட்ட சுகாதாரக் கல்வி வழங்குதல் தொடர்பில் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விசேட பயிற்சி வகுப்புகளை வழங்கவும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வற்புறுத்தப்படவில்லை
விசேட மகப்பேற்று மற்றும் பெண்களுக்கான மருத்துவ நிபுணர் அடங்கிய விசேட குழுவினால் நடத்தப்பட்ட ஆய்வின்படி, யாரையும் வற்புறுத்தியோ பயமுறுத்தியோ இக்கருத்தடை முறைமை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தடை சிகிச்சையானது அதிகமானவர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் மேற்கொண்டுள்ளப் பட்டுள்ளதால் சமூகமட்டத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு தப்பபிப்பிராயம் ஏற்படக் காரணமாகியுள்ளது.
முறையான சுகாதாரக் கல்வி வழங்கப்பட்ட பின்னர் தாய்மார் தமது சுயவிருப்பத்தின் பேரில் மேற்படி கருத்தடையை ஏற்றுக்கொண்டாலும் அவர்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுப்பதற்குரிய கால அவகாசம் வழங்கப்படாமையே குற்ற உணர்வு மற்றும் சமூக நெருக்கீடு ஏற்படக் காரணமாகியுள்ளது.
கால அவகாசம் போதுமானதாக இருந்திருந்தால் இக்கருத்தடை முறையினை பெற்றுக்கொண்டவர்கள் சமூக மட்டத்திலும் வீட்டிலும் நன்றாகக் கலந்தாலோசித்து நேரான சிந்தனையுடன் செயற்பட்டிருப்பார்கள். பத்திரிகைகள் இணையத்தளங்களில் பிரசுரமான தவறான கருத்துகள் ஏற்படாது தடுத்திருக்கலாம் என இக்குழு கருதுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போருக்குப் பின்னரான இந்தக் காலப்பகுதியில் போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்த எமது பிரதேசங்களில் குடும்பக்கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதற்கான அவசியமோ அவசரமோ தற்போது இல்லை என அமைச்சு கருதுகிறது.
இருந்தபோதும், குடும்பத் திட்டமிடல் தொடர்பான ஆலோசனைகள் தேவையுடையோர் அவற்றை சுகாதார நிலையங்களில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் செய்யப்படல் வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் எதிர்வரும் காலங்களில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சு திணைக்கள நடைமுறைகள் ஊடாகப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனவும் வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கருத்தடை குறித்து பாதிக்கப்பட்ட எவரும் முறைப்பாடு செய்யவில்லை – த.கனகராஜ்
கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழப்பு
வன்னியில் 3 கிராமங்களில் தமிழ் பெண்களுக்கு கட்டாயக் கருத்தடை!